இந்தியாவில் கடந்த 1-ம் தேதி அன்று 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நாட்டின் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. வரும் 2024-ல் நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பெற புதிய சிம் கார்டுகள் தேவையா என்ற கேள்வியும், சந்தேகமும் மக்களுக்கு எழுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. அதோடு காவல் துறையும் இந்த விவகாரத்தில் மக்கள் அலர்ட்டாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் 8 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தபோது அது குறித்த தகவலை பகிர்ந்திருந்தார் அதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டால். “இந்திய நாட்டில் டெலிகாம் புரட்சியில் கடந்த 27 ஆண்டுகளாக ஏர்டெல் முன்னணியில் உள்ளது. 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளதன் மூலம் புதிய நிலைக்கு முன்னேறி உள்ளோம். எங்களது ஒவ்வொரு இயக்கத்திலும் வாடிக்கையாளர்கள்தான் பிரதானம். அந்த வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் வசம் உள்ள சிம் கார்டை கொண்டே அந்த சேவையை பயன்படுத்தலாம். அதற்காக புதிய சிம் கார்டு மாற்ற வேண்டியதில்லை” என அவர் சொல்லி இருந்தார்.
ஜியோவுக்கும் இது பொருந்தும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் 4ஜி சிம் கார்டை 5ஜி சிம் கார்டாக மாற்றிக் கொடுக்கிறோம். ஓடிபி சொல்லுங்கள் என பயனர்களை அணுக வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழகத்தின் அரியலூர் மாவட்ட போலீஸ் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.