பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக கூகுள் தேடல் மூலமே ஓலா, உபெர் கால் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தி பயண முன்பதிவு செய்யலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இனி ஸ்மார்ட்போன் பயனாளிகள் தங்களின் மொபைல் தேடுபொறி மூலம், அடைய வேண்டிய இடம், என்ன வகையான சேவை தேவை என்பது குறித்த விவரங்களை இனி கூகுள் வழியாகவே தேர்ந்தெடுக்கலாம்.
இந்த வசதி, கூகுள் மேப்பின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய கூகுள் திட்ட மேலாளர் சங்கேத் குப்தா, ''இந்த வசதியின் மூலம் பயனாளிகள் தங்களின் மொபைல் வழியாகவே டாக்ஸி கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதன்மூலம் பயணிகள் விரைவில் முன்பதிவு செய்யவும் முடியும்'' என்று கூறினார்.
இந்த வசதியில் பயணிகள் ஓலா மற்றும் உபெர் ஆகிய இரண்டுக்குமான பயண சேவை வகைகள், கட்டண விவரங்கள் மற்றும் வாகனம் வந்து சேரும் நேரம் உள்ளிட்டவைகளைக் காண முடியும்.
குறிப்பாக உபெரிலோ, ஓலாவிலோ ''இருப்பிடத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை'' என்று குறிப்பிட்டால், கூகுள் தேடுதல் மூலம் ஒரே கிளிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிக்குச் சென்று பயண முன்பதிவு செய்ய முடியும்.
முன்னதாக, ஸ்மார்ட் போன்களில் ஓலா, உபெர் ஆகிய செயலிகள் இல்லாதபோது கூகுள், அச்செயலியைப் பதிவிறக்கச் சொல்லிவந்தது குறிப்பிடத்தக்கது.