பெய்ஜிங்: பல்வேறு பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் விவாதிப்பதற்கான தகுதி அவசியம் என சீனா கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சாமானிய மக்களும் பல்வேறு வலைதளங்கள் மூலம் பரவலாக அறியப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் கன்டென்ட். வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என எந்த வகையில் வேண்டுமானாலும் அது இருக்கலாம். இருந்தும் இப்போதைக்கு வீடியோ தான் மிகவும் டிரெண்டாக உள்ளது. இது உலக அளவில் பொருந்திப் போகின்ற விஷயமாகவும் உள்ளது. அந்த சாமானியர்களின் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டால் அவர்கள் அனைவரும் அறிந்த முகங்களாக உருவாகிறார்கள்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் ஹெல்த் டிப்ஸ், நிதி மற்றும் சட்ட வழிகாட்டுதல் என வெவ்வேறு ஜானரில் பலரும் தங்களுக்கு பிடித்த களத்தில் கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். சில நேரங்களில் அது ஃப்ரீ அட்வைஸாகவும் மாறி விடுகிறது.
இந்நிலையில், இந்த பணியை மேற்கொள்பவர்களுக்கு தகுதி அவசியம் என தெரிவித்துள்ளது சீனா. அது தொடர்பாக அந்த நாட்டில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, பல்வேறு இணையதள பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து விவாதிக்க சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு தகுதி அவசியம் என சீனா தெரிவித்துள்ளது. இருந்தாலும் அதன் தகுதியின் விவரம் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிகிறது. மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள் குறித்து விமர்சிக்கவும் கூடாது என சொல்லியுள்ளதாக தெரிகிறது.