சமூக ஊடகப் பயன்பாட்டுக்கான உதாரணங்கள் என்று வரும்போது பொதுவாகப் பிரபலங்களும், நட்சத்திரங்களும்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள்.
ஆனால் இவற்றில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும்கூட இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான ஃபாலோயர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
அவர் தன் நோயாளிகளுடன் தொடர்புகொள்ள ஸ்னேப்சாட் சேவையைப் பயன்படுத்தும் விதத்தை வியந்து பாராட்டும் கட்டுரை ஒன்றை இணைய இதழான ‘தி வெர்ஜ்’ வெளியிட்டுள்ளது.
ஸ்னேப்சாட் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப், ஹைக் போல இதுவும் ஒரு மெசேஜிங் சேவைதான். ஆனால் அடிப்படையில் மாறுபட்டது. சுவாரஸ்யமான மெசேஜிங் சேவை என்று வர்ணிக்கப்படும் ஸ்னேப்சாட் சேவையில் தகவல்களை ஒளிப் படமாகவும், வீடியோவாகவும் பகிரலாம். அவை பத்து நொடிகள் மட்டுமே பார்வையில் இருக்கும்.
அதன் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படிப் பார்த்தவுடன் மறைந்துவிடும் தன்மையே ஸ்னேப்சாட்டின் பலம். இதனால் இந்தச் சேவை பதின் பருவத்தினர், இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஸ்னேப்சாட் வெறும் சுவாரஸ்யமான தகவல் பரிமாற்றத்துக்கானது மட்டுமல்ல. அது செய்தி வெளியீடு, கதை சொல்லல், மார்க்கெட்டிங் எனப் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்னேப்சாட்டைப் பல துறையினரும் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அதன் பின்னே இருக்கும் இளைஞர் சமூகத்தைத் தொடர்புகொள்ள இது சிறந்த வழி. இதை உணர்ந்தவர் டாக்டர் ரூபின்ஷ்டியன்.
ரூபின்ஷ்டியன் சமூக ஊடகங்களின் ஆற்றலையும் அருமையையும் நன்கு உணர்ந்தவர். அவருக்கென இணையதளம் இருக்கிறது; டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சாட் உள்ளிட்ட சேவைகளில் தனக்கான பக்கங்களையும் தொடங்கிவைத்திருக்கிறார்.
இவற்றில் ஸ்னேப்சாட் சேவையைச் சிறப்பாகப் பயன்படுத்திவருகிறார். ஸ்னேப்சாட்டில் தனக்கான ஃபாலோயர்களைப் பெறுவதற்காக அவர் டிவிட்டர் குறும்பதிவுகள் மூலம் அவ்வப்போது கோரிக்கையும் வைத்து வருகிறார். நீங்கள் என்னைப் பின் தொடர்ந்தால் நானும் உங்களைப் பின்தொடர்வேன் என்றும் உறுதி அளிக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்டு, வருபவர்களைக் கவர்வதற்காக என்று ஸ்னேப்சாட்டில் பல் மருத்துவ சிகிச்சை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலமே நோயாளிகள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.
இந்தப் பதிவுகள் மூலம் அவர் தன்னைப் பற்றியும் தனது சிகிச்சை முறைகள் பற்றியும் நோயாளிகளுடன் பகிர்ந்துகொள்கிறார். இதன் மூலம் அவர் தனது நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.
ரூபின்ஷ்டியன் வெளியிடும் வீடியோக்கள் வழக்கமான யூடியூப் வீடியோக்கள் அல்ல: ஆறு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய புதுமையான வைன் வீடியோக்கள்.
பொதுவாக கேளிக்கைகளுக்கான இந்தச் சேவையை அவர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திவருகிறார்.
ரூபின்ஷ்டியன் இதன் மூலம் தனக்கான நோயாளிகளைத் தேடிக்கொள்கிறார் என்றாலும் அவரது பிரதான நோக்கம் நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதே. “நம்பினால் நம்புங்கள், இந்தக் காலத்திலும் பல் மருத்துவரிடம் வருவதற்குப் பயந்து நடுங்குபவர்கள் இருக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார் டாக்டர் ரூபின்ஷ்டியன்.
கிளினிக்கைக் கண்டு அஞ்சும் நோயாளிகளின் ஸ்னேப்சாட் மூலம் சந்தித்து பேசுவது இந்தப் பயத்தை போக்க உதவுகிறது என்று தனது சமூக ஊடகப் பயன்பாடு பற்றியும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஸ்னேப்சாட் போன்ற சேவைகள் மூலம் தொடர்பு கொள்வது மருத்துவ சிகிச்சை தொடர்பாக நோயாளிகள் மனதில் உள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் போக்க வழி செய்கிறது என்கிறார் அவர். ஸ்னேப்சாட் வாயிலாகக் கேட்கப்படும் சந்தேகங்களுக்குப் பொறுப்பாகப் பதிலளித்துவருகிறார்.
தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வாயிலாகவும் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டு பரவலாக மக்களைச் சென்றடைய முயல்கிறார். மக்கள் தன்னை ஒரு பல் மருத்துவராக மட்டும் அல்லாமல், பல் சிகிச்சை அளிக்கக்கூடிய சக மனிதராகப் பார்க்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஸ்னேப்சாட் சேவையைத் திறமையாகப் பயன்படுத்தும் மருத்துவராக இருப்பது ரூபின்ஷ்டியன் மட்டும் அல்ல; மியாமியைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி வல்லுநரான மைக்கேல் சால்ஷியர் எனும் டாக்டரும் இதைச் செய்து வருகிறார்.
தான் செய்யும் பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான தகவல்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் காட்சிகளை (நோயாளிகள் அனுமதியுடன்தான்) ஸ்னேப்சாட் மூலம் பகிர்ந்துகொண்டுவரும் டாக்டர் மைக்கேல் சமூக ஊடக உலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக இருக்கிறார். டாக்டர் மியாமி எனச் சமூக ஊடக உலகில் அவர் கொடிகட்டிப் பறக்கிறார்.
சமூக ஊடகங்கள் பெரும்பாலும் கேலி, கிண்டல், கேளிக்கை உரையாடலுக்கான இடமாகக் கருதப்படும் நிலையில் அதை மாற்றி அமைக்கும் வகையில் செயல்படுகிறார்கள் இந்த இரண்டு டாக்டர்களும்.
மருத்துவமனைச் சூழலையும், அறுவை சிகிச்சை அறைகளையும் ஸ்மார்ட்போனுக்குள் கொண்டுவந்து, மக்களுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள்.
டாக்டர் ரூபின்ஷ்டியனின் டிவிட்டர் பக்கம்: @DRubinshtein