இணையம் மூலம் உங்கள் சந்திப்புகளை எளிதாகத் திட்டமிட்டு நிர்வகித்துக்கொள்ளலாம். ‘கூகுள் காலண்டர்’ வசதி இதற்கு உதவும் என்பதோடு, இந்த வசதியை ஒருங்கிணைக்கும் வகையில் பல திட்டமிடல் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், சந்திப்புகளே உங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? கவலையே வேண்டாம் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது. ‘மீட் அனதர் டே’ தளம் மூலமாக உங்களின் அடுத்த சந்திப்பை நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம். அதாவது பொய் சந்திப்புக்கான திட்டமிடல்!
கூகுள் காலண்டரில் இந்தச் சந்திப்புக்கான தினத்தைக் குறித்து வைத்துக்கொண்டு, எவ்வளவு நேரம் என்பதையும் குறிப்பிடலாம். குறிப்பிட்ட அந்த தினத்தில் அவசியம் செய்ய வேண்டிய வேலைக்காக இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திட்டமிடலில் ஒரு திருப்தி இருக்கிறது அல்லவா? அதை அழகாகப் பயன்படுத்திக்கொண்டு, இல்லாத ஒரு சந்திப்புக்காக நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த உதவுகிறது இந்த இணையதளம். மிக எளிமையான ஆனால், கொஞ்சம் புதுமையான சேவை.
இணையதள முகவரி: >http://meetanotherday.com/