ஸ்மார்ட் போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று புலம்பும் அளவுக்கு அதற்குப் பழகிவிட்டீர்களா? கவலையே வேண்டாம், ஸ்மார்ட் போன் மோகத்தில் இருந்து சற்றே விடுபட சுவாரஸ்யமான முறையில் வழி காட்டுகிறது ‘ஃபாரஸ்ட் ஆப்’ செயலி. ஸ்மார்ட் போனில் கவனம் செலுத்தாமல் வேறு முக்கியப் பணிகளில் ஈடுபட விரும்பும் போது இந்தச் செயலியை இயக்க வேண்டும். உடனே திரையில் ஒரு மரம் வளரத் தொடங்கும். அடுத்த அரை மணி நேரத்திற்குச் செயலி அப்படியே இயங்கிக்கொள்ள அனுமதித்தீர்கள் என்றால் மரம், முழுமையாக வளரும். அதுவரை நீங்களும் உங்கள் பணியில் மூழ்கி இருக்கலாம்.
மரத்தை வெட்டாமல் இருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் நீங்கள் போனில் கை வைக்காமல் இருக்க வேண்டும். மரம் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது உற்சாகம் ஏற்படும் அல்லவா? அதற்காகப் பொறுமையாக இருக்கத் தோன்றும். வேலையையும் கவனிக்கலாம்.
இந்தச் செயலி ஆண்ட்ராய்டு, ஐபோனில் செயல்படுவதோடு, இணைய பிரவுசர்களிலும் செயல்படுகிறது. பிரவுசரில் பயன்படுத்தும்போது, அரை மணி நேரத்துக்கு இணையதளங்களின் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். எந்தத் தளங்களை ‘பிளாக்’ செய்ய வேண்டும் எனும் பட்டியலைப் பயனாளிகள் தீர்மானித்துக்கொள்ளலாம். கவனச் சிதறல்களுக்கான வாய்ப்பு இணையத்தில் அதிகம் இருக்கும் நிலையில், அவற்றில் இருந்து மீள இந்தச் சேவை கைகொடுக்கும்.
மேலும் விவரங்களுக்கு: >http://www.forestapp.cc