தொழில்நுட்பம்

தீப்பெட்டிக் கலைகள்

செய்திப்பிரிவு

‘கையிலே கலை வண்ணம்’ என்பது போல, பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி. அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘ஆர்ட் ஆன் எ பாக்ஸ்’ பகுதிக்குச் (https://www.instagram.com/artonabox/) சென்றால் இதன் அர்த்ததை ‘பளிச்’செனப் புரிந்துகொள்ளலாம். அப்படியே தீப்பெட்டிகளின் அழகிலும் மெய்மறந்து நிற்கலாம்.

ஆம், ஸ்ரேயா தீப்பெட்டிப் படங்களை ஆர்வத்துடன் சேகரித்துவருபவர். இப்படி, தான் சேகரிக்கும் தீப்பெட்டிப் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

அடடா! தீப்பெட்டிகளின் மீது இடம்பெறும் படங்கள்தான் எத்தனை அழகாக இருக்கின்றன. அவற்றின் வகைகள்தான் எத்தனை! இந்த வியப்பைத்தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் உண்டாக்குகிறது.

தீப்பெட்டிகளைச் சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்கிறார் ஸ்ரேயா. அவை பல உணர்வுகளை, செய்திகளை வெளிப்படுத்துவதாகவும், அவற்றை வெறும் பெட்டிகளாகப் பார்க்க, தான் தயாராக இல்லை என்றும் ஒரு பேட்டியில் உற்சாகமாகக் கூறியிருக்கிறார். தீப்பெட்டிகள் பிரச்சார சாதனமாக, விளம்பர வாகனமாகப் பயன்படலாம் என்கிறார்.

தீப்பெட்டி மேலே இருக்கும் ஒவ்வொரு படமும் மேலும் ஆழமான ஒன்றை, கனவின் கதைகளை, தினசரிப் பொருட்களின் கதைகளை, சமூகத்தின் மனப்போக்கைப் பேசுவதாக அவர் சொல்கிறார்.

இந்தியா முழுவதும் வெளியாகும் தீப்பெட்டிகளில் உள்ள படங்கள் பெரும்பாலும் கடவுளின் உருவங்களைக் கொண்டிருக்கின்றன என்றாலும் வேறு சில விஷயங்களும் அலங்கரிக்கின்றன.

குடியரசு தின வாழ்த்துடன், இந்திய தேசியக்கொடி படம் கொண்ட தீப்பெட்டிச் சித்திரம் மற்றும் ராஜஸ்தான் சுற்றுலாத்துறை விளம்பரம் தொடர்பான குறிப்புடன் ராஜஸ்தான் அரண்மனை பட தீப்பெட்டிச் சித்திரத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளதைப் பார்க்கும் போது தீப்பெட்டிக் கலை என்பது எத்தனை பரந்துவிரிந்தது என்பது மட்டும் அல்ல, நம் நாட்டின் இயல்பை அவை எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் உணர முடிகிறது.

ஸ்ரேயாவின் ஆர்வத்தை அறிந்து அவரது உறவினர்களும் நண்பர்களும் எங்கே சென்றாலும் தீப்பெட்டிகளைச் சேகரித்து வந்து தருகின்றனராம். அதோடு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்களும் அவருடன் தீப்பெட்டிக் கலையைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

எல்லாம் சரி, ஸ்ரேயாவுக்கு எப்படித் தீப்பெட்டிக் கலை மீது ஆர்வம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன் இதழியல் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தபோது, தீப்பெட்டிப் படங்கள் உணர்த்தும் செய்தி எனும் தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார். அப்போது தொட‌ங்கிய தீப்பெட்டி சேகரிப்பு இப்போது இன்ஸ்டாகிராமில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT