தொழில்நுட்பம்

வீடியோ புதிது: வாழ்க்கைப் பாடம்

சைபர் சிம்மன்

வாழ்க்கையில் செய்யத் தவறியதற்காக நீங்கள் மிகவும் வருந்தும் விஷயம் எது? இந்தக் கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் தோன்றியதுண்டா? இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

யூடியூப் வீடியோ ஒன்று இதே கேள்வியைக் கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சமூகச் செய்தி நிறுவனமான 'ஏ பிளஸ்' இந்த வீடியோவை உருவாக்கிப் பதிவேற்றியுள்ளது. இந்த வீடியோவுக்காக நியூயார்க் நகரின் மையப் பகுதியில் பெரிய கரும் பல‌கை வைக்கப்பட்டு அதில், உங்கள் வாழ்க்கையில் செய்யத் தவறியதற்காக நீங்கள் மிகவும் வருந்தும் விஷயம் எது எனும் கேள்வி எழுதப்பட்டிருந்தது.

இந்தப் பலைகையைப் பார்க்கத் தொட‌ங்கும் நபர்கள் ஆரம்பத் தயக்கத்துக்குப் பிறகு அதில் வந்து தங்களின் மனதில் உள்ள வருத்தங்களை எழுதத் தொட‌ங்கினர். கனவுகளைப் பின் தொடரமால் போனது, மருத்துவக் கல்லூரியில் சேராமல் போனது, மேலும் தீவிரமாக அன்பு செலுத்தத் தவறியது என வரிசையாக ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள வருத்தங்களை வார்த்தைகளாக எழுதுகின்றனர்.

வீடியோவின் நடுவில், எல்லோர் மனதிலும் உள்ள வருத்தங்களில் உள்ள பொதுத்தன்மை சுட்டிக்காட்டப்படுகிறது. செய்யத் தவறிய செயல்களும், பேசத் தவறிய வார்த்தைகளும், மேற்கொள்ள மறந்த கனவுகளும்தான் அவை எனக் குறிப்பிடப்படும் போது உள்ளத்தை லேசாக அசைத்துப் பார்க்கவே செய்கிறது.இப்படி வருத்தமான‌ நினைவுகளில் மூழ்கச் செய்யும் வீடியோவில் அதன் பிறகு ஒரு சின்ன திருப்பம் வருகிறது.

அந்தக் கரும்பலகையில் உள்ளவை எல்லாம் அழிக்கப்பட்டு முற்றிலும் புதிய கரும்பலகை தோன்றுகிறது. அதில் நீங்கள் செய்யாததற்கு வருந்தும் விஷயங்களை ஒவ்வொரு தினமும் செய்யுங்கள் எனும் ஊக்கம் தரும் வாசகத்துடன் வீடியோ முடிகிறது. இது போல மேலும் பல வீடியோக்கள் இந்த சமூகச் செய்தித் தளத்தின் யூடியூப் சேனலில் உள்ளன.

நீங்களும் பார்த்து ஊக்கம் பெறுங்கள்

</p>

SCROLL FOR NEXT