ஆண்ட்ராய்டு புதிய செயலிகளைக் கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் பிளேஸ்டோரில் தேடலாம். அதே போல ஐபோன் அல்லது ஐபேடிற்கான செயலிகள் தேவை என்றால் ஆப்ஸ்டோரில் தேடிக்கொள்ளலாம்.
ஆனால், இந்தத் தேடல் வசதி குறித்து அதிருப்தி கொள்ளும் பயனாளிகள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆப்ஸ்டோரில் ஒருவர் எதிர்பார்க்கும் செயலியைத் தேடுவது அத்தனை எளிதல்ல என்று பலரும் நினைக்கலாம். இந்தக் குறையைப் போக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது ஆப்ஆப்.இயோ (>https://appapp.io/us).
இதில் ஐபோன் பயனாளிகள் தாங்கள் எதிர்பார்க்கும் செயலிகளை எளிதாக தேடிக்கொள்ளலாம். தேவையான செயலிகளை எளிதாக தேடுவது தவிர இதில் பரிந்துரைக்கப்படும் செயலிகளையும் பல விதத் தலைப்புகளில் பார்க்கலாம். விளம்பர தொல்லைகள் கொண்ட செயலி போன்றவற்றைத் தவிர்த்து, எதிர்பார்க்கும் பயனுள்ள செயலியை தேடிக்கொள்ளலாம் என உறுதி அளிக்கிறது இந்தத் தளம்.
ஏனெனில், இதனை உருவாக்கியவர், தனது மகளுக்காக ஐபேடில் பயன்படுத்தக்கூடிய கணிதம் சார்ந்த நல்ல செயலியை எளிதாகத் தேட முடியாமல் வெறுத்துப்போன பின், தன்னைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்தத் தளத்தை ஐபோன் செயலிகளுக்கான தேடியந்திரமாக உருவாக்கி இருக்கிறார்.