தொழில்நுட்பம்

பேஸ்புக் நிறுவனரின் வெற்றிப் பாதை

சைபர் சிம்மன்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப் பாதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் ஹார்வர்டில் படித்தவர்; அப்போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம்தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரம் நிச்சயம் தெரிந்திருக்கும்.

எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

சிக்கலான கேள்விதான். மார்க் வேலைக்குச் செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டதால் அவர் வேலைக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்திய ரெஸ்யூம் எப்படி இருந்திருக்கும் என அறிய வாய்ப்பில்லை. அதனால் என்ன, மார்க் தனக்கான ரெஸ்யூமைத் தயார் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை என்ஹான்ஸ்சிவி இணையதளம் உருவாக்கிக் காட்டியிருக்கிறது.

மார்க் வாழ்க்கை இப்போது ஒரு திறந்த புத்தகம் என்பதால், அவருடைய கல்வித் தகுதி, கம்ப்யூட்டர் கோடிங் அனுபவம், பேஸ்புக்குக்கு முன் அவர் தொடங்கிய இணைய சேவைகள் போன்ற விவரங்களை எல்லாம் வைத்துக்கொண்டு அவருக்கான ரெஸ்யூமை உருவாக்கியுள்ளனர்.

கண்களில் கனவுடன் பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் துடிப்புடன் விண்ணப்பிக்கும் தொழில்நுட்ப கில்லாடி ஒருவரின் ரெஸ்யூம் எப்படி நவீனமாக இருக்குமோ அப்படி அமைந்திருக்கிறது.

கல்வித் தகுதி, சாப்ட்வேர் அனுபவம், சாப்ட்வேர் சேவைகள் ஆகிய விவரங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன என்றால், வலது பக்கத்தில், தொழில்நுட்ப பலங்கள், படித்த புத்தகங்கள், சாதனைகள், அறிந்த மொழிகள் மற்றும் ஈடுபாடுகள் ஆகிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மார்க் கல்லூரியில் உளவியலைத்தான் மூலப் பாட மாகப் படித்தார் எனும் தகவலும், ஆங்கிலம் தவிர சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து மொழிகளை அறிந்திருந்தார் எனும் தகவலும் வியப்பை அளிக்காமல் இல்லை.

பேஸ்புக்குக்கு முன்னதாக பேஸ்மேஷ் எனும் சமூக வலைதளத்தை உருவாக்கிய விவரமும் அதன் பிறகு கோர்ஸ் மேட்ச் எனும் தளத்தை அமைத்ததும் பலரும் அறியாத தகவல்களாக இருக்கும்.

மார்கிற்குப் பிடித்த மேற்கோள்களும் அவரது வாழ்க்கைப் பழக்கம் பற்றிய வரைபடமும் கவனத்தை ஈர்க்கின்றன.

மொத்தமாகப் பார்க்கும்போது இந்த ரெஸ்யூம் சிறப்பாக இருப்பதுடன், பேஸ்புக் நிறுவனரைச் சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக அறிமுகம் செய்து வைக்கிறது.

பக்கம் பக்கமாக வாழ்க்கை வரலாற்றைப் படித்துக்கொண்டிருப்பதைவிட ஒருவரை அவரது சுய விவரக்கோவை ( ரெஸ்யூம்) மூலம் அறிந்துகொள்வது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. என்ஹான்ஸ்சிவி இணையதளம் தனது அடிப்படை சேவையான புதிய ரெஸ்யூம் தயாரித்தளித்தலுக்கான புதுமையான விளம்பர மாகத்தான் இதை உருவாக்கி இருந்தாலும் கூட மிக அழகாக மார்க் ஜக்கர்பர்க் பற்றி இது அறிமுகம் செய்கிறது.

ரெஸ்யூம் கீழே, அதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கைக் குறிப்புகள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன. மார்க்கின் தந்தை அவருக்கு அட்டாரி பேசிக் புரோகிராமிங் கற்றுத்தந்தது, பின்னர் பயிற்சியாளர் ஒருவர் மூலமாகத் தனியே சாப்ட்வேர் திறமை பயிற்றுவித்தது போன்ற விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

மார்க் ஜக்கர்பர் ரெஸ்யூமைக் காண: http://goo.gl/6MH8yk

SCROLL FOR NEXT