தொழில்நுட்பம்

இணையத்துக்கு ஈடானது அல்ல ஃபேஸ்புக்: மார்க் ஸக்கர்பெர்க் சிறப்புப் பேட்டி

செய்திப்பிரிவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு அந்நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், முன்னதாகவே அழைக்கப்பட்டிருந்த இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதனிடையே, 'தி இந்து பிஸினஸ்லைன்' சிறப்புச் செய்தியாளர் தாமஸ் கே. தாமஸுக்கு மார்க் ஸக்கர்பெர்க் அளித்த சிறப்புப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம்:

ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் தளமாக மட்டுமே செயல்பட்ட நிலையில் இருந்து ஃபேஸ்புக், இலவச அடிப்படை வசதி மற்றும் கிராமப்புறங்களுக்கு இணையவசதி அளிக்கும் 'எக்ஸ்பிரெஸ் வைஃபை' வசதிக்கான தொடக்க வேலைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் முக்கிய அம்சமாக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், உலகம் முழுக்கவுள்ள தொலைதூர மூலைகளில் இருக்கும் கிராமங்களில் இணையத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். உலகிலேயே, அதிகமாக ஃபேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், மார்க்கின் முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இலவச அடிப்படை இணைய வசதிகளுக்காக போராடும் மார்க், மக்கள் ஒவ்வொருவருக்கும் இடையேயான இணைப்பு, நன்மை பயக்கும் என்கிறார்.

இணைய சமவாய்ப்புக்கு (நெட் நியூட்ராலிட்டி) ஃபேஸ்புக் ஆதரவளிக்கும் அதே நேரத்தில், இலவச அடிப்படை வசதிகள் என்னும் பெயரில் அதை மீறுகிறது. இது சரியா?

இணைய சமவாய்ப்புக்கு குரல்கொடுக்கும் நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். இந்தியா போன்ற அதிகம் இணைக்கப்படாத மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், இணையம் என்பது அவசியத் தேவை. இது இரண்டையும் நாம் ஒரே கோணத்தில் அணுகவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சேவையைப் பயன்படுத்த ஒருவர் விரும்பும்போது, நிறுவனங்கள் அதிகமான கட்டணத்தை வசூலிப்பது தவறானது. அதைத்தான் நாங்கள் தவறு என்று சொல்கிறோம். ஆனால், வகுப்பில் மாணவர் ஒருவர் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி சரியாகும்? இங்கே இணைய சமவாய்ப்பு மற்றும் இலவச இணையம் குறித்த வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு அவசியத்தேவையாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் இருக்கும் மக்களை இணையத்தின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும். உதாரணத்துக்கு புகழ்பெற்ற இந்தியக் கணிதவியல் மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை எடுத்துக் கொள்வோம். ஒரேயொரு கணிதப் புத்தகத்தைக் கொண்டு அவர், நவீன கணித உலகையே மாற்றியமைத்தார். அப்போது அவரிடம் இணைய வசதி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்போதும் எத்தனை ராமானுஜன்கள், ஒற்றைப் புத்தகம் கூட இல்லாமல் இருக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இணைய வசதி கொடுத்தால் எப்படியிருக்கும்? அவர்களால் உலகத்துக்கு எவ்வளவு சிறந்த பங்களிப்பை அளிக்கமுடியும்?

மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஃபேஸ்புக், இணைய உலகையே ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகம் எப்படி எங்களைப் பார்க்கிறதோ, அதை விடக் குறைவான நிலையில்தான் இருக்கிறோம். இது எங்களின் வளர்ச்சிக் காலம் மட்டுமே. நாங்கள் ஃபேஸ்புக்கை ஆரம்பித்த காலகட்டத்தில், உலகத்தை ஒற்றைப்புள்ளியில் இணைத்த எங்களின் செயலை வருங்காலத்தில் வேறு யாராவது செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்களின் அருகில், அன்று நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தோம். அச்செயலை நாங்களே செய்துமுடிப்போம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பதிவுகள் / தவறான செய்திகளை நீக்குமாறு கூறினாலும் ஃபேஸ்புக் சீக்கிரத்தில் பதிலளிப்பதில்லை என்று அரசாங்கங்கள் கூறுவதாக வரும் செய்திகள் உண்மையா?

தீவிரவாதம் தொடர்பான பதிவுகளை என்றுமே நாங்கள் விரும்புவதில்லை. அத்தகைய கருத்துகளை பயனர்கள் ரிப்போர்ட் செய்ய உதவும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை உருவாக்கி இருக்கிறோம். அதற்காக ஏராளமான நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்திருக்கிறோம். கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ள பதிவுகள் தினந்தோறும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. சட்ட அமலாக்கத் துறையினரிடம் இதைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இயல்பான இணையத்தைத் தாண்டி ஃபேஸ்புக் தனியாகவே, ஏராளமான தொழில்நுட்ப சாதனங்களையும், இடங்களையும் அடைந்துகொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் இணையத்தில் ஒன்றா... இல்லை இணையத்துக்கே ஈடான ஒன்றா?

நிச்சயம் இல்லை. நாங்கள் மக்களுக்கு இடையேயான பாலம் அவ்வளவே. அதற்காக இணையத்தில் இருக்கிறோம். அதற்காக மட்டுமே இலவச அடிப்படை இணைய வசதிகளை அளிக்க எண்ணுகிறோம். அதே நேரத்தில் எல்லா நெட்வொர்க்குகளிலும் நல்ல அனுபவத்தைத் தர எண்ணுகிறோம். எல்லோராலும் 4ஜி, 3ஜியைப் பயன்படுத்த முடியாது. 2ஜியைப் பயன்படுத்துபவர்களுக்காகவே குறைந்த டேட்டாவை எடுத்துக் கொள்ளும் 'ஃபேஸ்புக் லைட்' சேவையை அளிக்கக் காரணம் இதுதான்.

இந்தியாவின் மீதான நேசத்தில் சுய விருப்பத்தினால்தான் அனைவருக்கும் இணையம் என்ற நோக்கத்தில் செயல்படுகிறீர்களா?

நிச்சயமாக. இந்தியாவின் பலதரப்பட்ட கிராமங்கள் வழியாகப் பயணித்திருக்கிறேன். எனக்கு செல்வம் ஈட்டிக் கொடுத்தது ஃபேஸ்புக். அதை சமூகத்துக்கே திருப்பிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே அதற்கான தொடக்கத்தைப் பற்றிய செய்திகள் வெளிவரும்.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

SCROLL FOR NEXT