அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், இனவாதி என்று தேடும்போது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கம், பயனர்கள் பக்கத்தில் முதலில் காட்டப்படுகிறது.
இந்தத் தேடலில் வந்த இன்னும் சில பக்கங்களில் இனவாதம், இனவாதி ஆகிய வார்த்தைகள் அவர்களின் பெயர்களிலோ, அவர்களைப் பற்றிய விவரங்களிலோ கொடுக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்துப் பேசிய ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், "ஒரு பயனர், குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகளை வைத்து ஒரு பயனரைப் பற்றிப் பேசும்போது, அந்தப் பக்கம், அந்த வார்த்தைகள் தேடலின் போது முன்னே வரும்படிதான் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் ட்விட்டர் பயனர்கள், அதோடு ட்ரம்ப்பின் பக்கத்தையும் குறிப்பிடுவதால் இப்படி நடந்திருக்கலாம்" என்று தெளிவான விளக்கம் அளித்தார்.
கடந்த மாதம் ட்ரம்ப் செய்த ட்வீட்களின் உண்மைத் தன்மையை அறிவது பற்றி ட்விட்டர் தளம் வெளிப்படையாகக் குறிப்பிட ஆரம்பித்ததிலிருந்தே ட்ரம்ப்புக்கும், ட்விட்டருக்குமான மோதல் வலுத்தது. பின்னர் சமூக ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை ரத்து செய்யும் ஒரு சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். தொடர்ந்து, ட்ரம்ப்பின் ஒரு ட்வீட் வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதாகவும், அது ட்விட்டரின் விதிமுறைகளை மீறிய வகையில் இருப்பதாகவும் கூறி அவரது ட்வீட்டை முடக்கியது ட்விட்டர்.
அதே ட்வீட்டை ஃபேஸ்புக்கில் பகிரும்போது அந்நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குத் தீவிர இடதுசாரி குழுக்களே காரணம் என்று சொல்லும் ட்ரம்ப்பின் பிரச்சார வீடியோ காப்புரிமை மீறலுக்காக முடக்கப்பட்டது.