கிருமி நாசினியை உடம்பில் செலுத்துவது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய வீடியோவை நீக்குவது குறித்து ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
உடம்பில் கிருமி நாசினியையோ, அல்ட்ராவயலட் போன்ற சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தியோ கோவிட்-19க்கு சிகிச்சை செய்ய முடியுமா என்று மருத்துவர்கள் பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். சர்வதேச அளவில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மருத்துவ நிபுணர்களும் ட்ரம்ப்பின் இந்த யோசனையை விமர்சித்துள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களில் இது குறித்த பல்வேறு பதிவுகளும் பகிரப்பட்டன. கோவிட்-19 தொற்று குறித்த தவறான தகவல்களைத் தேடிப் பார்த்து நீக்கி வரும் ட்விட்டர் நிர்வாகம் இந்த வீடியோவை நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கிருமிநாசினியை உடம்பில் செலுத்துதல் தொடர்பான ஹேஷ்டேகுகளை முடக்கியுள்ளது.
இது பற்றி தெளிவுபடுத்தியுள்ள ட்விட்டர், "கோவிட்-19 தொடர்பான ட்வீட்டோ, ஹேஷ்டேக், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான விஷயங்களைச் செய்யச் சொன்னால் அவை உடனடியாக நீக்கப்படும். அதே நேரத்தில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்கள் இருக்கும் ஒவ்வொரு ட்வீட்டையும் நீக்க முடியும். கோடிக்கணக்கானோர் இயங்கும், வெளிப்படையாகச் செயல்படும் எங்களது தளத்தில் இது அளவிட்டு செய்ய முடிகிற வேலை அல்ல. அப்படிச் செய்தால் அது நடந்து கொண்டிருக்கும் பல (முறையான) உரையாடல்களையும் கட்டுப்படுத்தும்.
மேலும் நையாண்டியான ட்வீட்டுகள், கோவிட்19 பற்றிய அவ்வப்போது நடக்கும் விஷயங்களைப் பற்றிய ட்வீட்டுகள், மற்றவர்களை இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று சொல்லவில்லை என்றால் அவை எங்கள் விதிகளை மீறவில்லை என்றே கருதப்படும். கோவிட்-19 பற்றி உரையாட நிறையப் பேர் ட்விட்டருக்கு வருகின்றனர். அவர்களுக்குச் சரியான தகவல் தர வேண்டும் என்று நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆபத்தை ஏற்படுத்தும் ட்வீட்டுகளை நீக்குகிறோம்" என்று கூறியுள்ளது.