கோப்புப் படம் 
தொழில்நுட்பம்

பாதிக்கப்படும் ஸ்மார்ட்போன் விற்பனை: துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஐஏஎன்எஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில் நிலவும் ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலையை அலச முடியாமல் தவிக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளை வாங்குவதில் மக்கள் கவனம் அதிகம் இருப்பதால் புதிதாக ஒரு கருவியை வாங்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

தேசிய ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இணைய வர்த்தகமும் முடங்கியுள்ளதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 40 சதவீதம் இறக்கத்தைச் சந்திக்கவுள்ளது.

கவுண்டர்பாயிண்ட் என்ற அமைப்பின் ஆய்வின்படி, நிச்சயமற்ற சூழலில் தாங்கள் விரும்பிய பொருட்களை மக்கள் வாங்குவதில்லை என்றும், எனவே ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரிய இறக்கம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும், ஆனால் இந்த நிலை ஆறு மாதங்களைத் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து உதிரி பாகங்களை வாங்குவது பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் புதிய மொபைல் உற்பத்தி மற்றும் அறிமுகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இப்போதுதான் மெதுவாக, மிகவும் எச்சரிக்கையாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இப்படி விநியோகச் சங்கிலியில் இருக்கும் பாதிப்பு இரண்டாம் காலாண்டு வரை நீடிக்கும்.

ஆனால், சர்வதேச அளவில் இந்த விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதால் ஸ்மார்ட்போனிலிருந்து மற்ற நுகர்வோர் மின்சாதனங்களின் உற்பத்தி வரை பாதிக்கப்படவிருப்பதே பெரிய கவலை.

கவுண்டர்பாயிண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆய்வு இயக்குநர் ரிச்சர்ட்சன் இதுபற்றிப் பேசுகையில், "காலப்போக்கில் சராசரி சந்தை வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்காது என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், ஆண்டு வளர்ச்சி விகிதங்கள் மந்தமாகும். ஆனால் சமீபத்திய மந்த நிலையின்போது மீண்டது போல மீளும்" என்று கூறினார்.

கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் இன்னமும் உதிரி பாகங்களுக்கு நாம் சீனாவையே சார்ந்திருக்கிறோம். தற்போதைய ஊரடங்கில் இணைய வர்த்தக தளங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் புதிய மொபைல் அறிமுகங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் இப்படி புதிய அறிமுகங்களை ஒத்திவைப்பது சரியான திட்டமாக இருந்தாலும், அதே நேரத்தில் மொபைல் அந்தந்த நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சில்லறை விற்பனையாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், அரசாங்கமும், இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி முதல் விநியோகம், விற்பனை வரை அதில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவு தர வெண்டும் என்றும் கவுண்டர் பாயிண்ட் ஆய்வு அமைப்பின் இணை இயக்குநர் தருண் பதக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT