கூகுள் மேப்ஸ், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்ற தகவலை பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தந்து உதவுகிறது.
மக்கள் இளைப்பாற வரும் இடம், அங்காடிகள், மருந்தகங்கள், பூங்காக்கள், வீடு இருக்கும் இடங்கள் என எங்குக் கூட்டம் கூடுகின்றனர் என்பதை கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‘COVID-19 Community Mobility Reports’ என்ற இணையதளத்திற்குச் சென்றால் அதிகாரிகள் எந்த தேசம் என்று தேர்ந்தெடுத்து, அதில் வரும் பிடிஎஃப் தரவுகளைப் பதிவிறக்கம் செய்துகொண்டு மக்களின் நடமாட்டத்தை அறியலாம்.
இந்தியா உட்பட 131 நாடுகளின் மக்கள் நடமாட்டம் தற்போது தரவுகளாகக் கிடைக்கின்றன. உள்ளூரில் ஒரு கடை எப்போது கூட்டமாக இருக்கும் என்பதை மக்கள் எப்படி கூகுள் மேப்ஸ் மூலமாக அறிந்து கொண்டார்களோ அதே முறையில்தான் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் என கூகுள் கூறியுள்ளது. இப்படித் திரட்டப்படும் தகவல்களில் தனிப்பட்ட நபரின் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் இருக்காது.
கூகுள் மேப்ஸின் மூத்த துணைத் தலைவர் ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக், "கோவிட்-19 பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இதுபோலத் திரட்டப்படும் தரவுகள் உபயோகமாக இருக்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் எங்களிடம் கூறினர். எனவே, கோவிட்-19 சமுதாய நடமாட்டம் பற்றிய அறிக்கையை நாங்கள் முன்கூட்டியே வெளியிடுகிறோம். இதை வைத்து வீட்டிலிருந்து வேலை செய்வதில் என்ன நடமாட்டம் மாறியிருக்கிறது, ஒரே இடத்தில் தங்குவதில் என்ன மாறியிருக்கிறது உள்ளிட்ட இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரத் தேவையான விதிமுறைகளை வகுக்கத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் " என்று தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களின் தரவுகள் இதில் கிடைக்கும். கடைசி 48-72 மணிநேர விவரங்கள் வரை இடம்பெறும். இதில் எவ்வளவு சதவீதம் நடமாட்டம் கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறதே தவிர சரியான எண்ணிக்கை என்ன என்ற விவரங்கள் இருக்காது.
வரும் வாரங்களில் இன்னும் பல்வேறு நாடுகளையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த நாட்டு பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் தங்கள் மக்களைக் காப்பாற்ற ஏதுவான வழிமுறைகளைக் கையாள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தரவுகளை வைத்து அலுவலக நேரம், டோர் டெலிவரி சேவைக்கான நேரம் ஆகியவற்றைத் திட்டமிட முடியும். அதேபோலத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கான இடத்தில் நடமாட்டம் இருந்தால் கூடுதல் போக்குவரத்து வசதி கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும்.