கணினித் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் ஜனநாயகப்படுத்தியவர் என்று அறியப்படும் பில் கேட்ஸ், அவர் தொடங்கிய நிறுவனத்திலிருந்து விலகி சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் எனும் கனவு சாம்ராஜ்யத்தை நிஜமாகவே கட்டியெழுப்பி இப்போது அதிலிருந்து விலகியுள்ளார் பில் கேட்ஸ். தொடர்ந்து சேவைப் பணிகளை விரிவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு சிறப்பான இடைவெளி என்று அவர் கூறுகிறார்.
இந்த இடைவெளியை பில் கேட்ஸ் ஒரே நாளில் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பிருந்தே தனது மனைவி டெலிண்டாவுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி எளியோருக்கு உதவிகளைச் செய்து வந்தார் பில் கேட்ஸ்.
இதற்காக மைக்ரோசாப்டில் பல இயக்குநர்களில் ஒருவராக மட்டுமே இடம் பெற்று, உச்சத்திலிருந்து இறங்கி வந்தார். துடிப்புமிக்க இந்திய இளைஞர் சத்யா நாதெள்ளாவிடம் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஒப்படைத்தார்.
சேவைப் பணியில் அவ்வப்போது என்பதைவிட முழுமையாக என்பதுதான் இப்போது பில் கேட்ஸிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வந்ததும், 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்ததும் அந்தச் செல்வாக்கும் பணமும் வாய்ப்புகளும் திகட்டுவதும்கூட இந்த விலகலுக்குக் காரணம் எனலாம்.
பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை
வாஷிங்டனின் வளமான குடும்பம் ஒன்றிலிருந்து பில் கேட்ஸ் பிறந்தாலும் கம்ப்யூட்டர் சாம்ராஜ்ய கனவை நிஜமாக்குவதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளமானவை.
அவர் 13 வயது மாணவனாக இருந்தபோதே கணினி உதிரிபாகங்களை வகைப்படுத்தத் தெரிந்துகொண்டார். அந்த வயதிலேயே நிரல்பட அதன் நுட்பங்களைக் கையாளத் தொடங்கினார். மேலும் கணிப்பொறி மீது தீராக் காதலை வளர்த்துக்கொண்டார்.
கேட்ஸைப் பற்றிச் சொல்லப்பட்ட கதைகளில், பள்ளி கணினிகளில் பணிபுரியும்போது, அவர் பெரும்பாலும் பெண்கள் நிறைந்திருந்த வகுப்புகளில் அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு தன்னை இயந்திரப் பொறிகளுடன் ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்பினார் என்பதாகும்.
ஆரம்பத்தில் விளையாட்டாகத் தொடங்கினாலும் பில் கேட்ஸ், தன்னுடைய நண்பர்களுடன் தொடர்ந்து கணினியில் ஆராய்ந்து வந்தது பொழுதுபோக்குக்காக அல்ல. இதை அறியா பள்ளி நிர்வாகம் அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. தடைகளையும் ஏற்றுக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறி தனது தேடல்களுக்கு வடிவம் தேடி அலைந்தார்.
1973-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலத் தொடங்கியபோது பேராசிரியர்களின் எதிர்பார்ப்புகளைக் கடந்து நின்றார். இளம் வயதிலேயே அவர் பெற்றிருந்த கணினி நிரலாக்க (programme) அனுபவங்களைக் கொண்ட பில் கேட்ஸ், புதிய மென்பொருள் வடிவாக்கங்களை எழுதத் தொடங்கியதை பலரும் வியப்புடன் பார்த்தனர். கணிப்பொறியில் உலக அளவில் சாதிக்க முடியும் என்பது அங்குதான் உறுதியானது.
பில் கேட்ஸ், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார். தனது பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், ஹார்வர்டில் இருந்து தனது குழந்தைப் பருவ நண்பரான ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கணினி தயாரிப்பாளர்களுக்கு மென்பொருள் உரிமம் வழங்குவதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக பல கூட்டாண்மைகள் அவருடன் கரம் கோக்க முடிந்தது. இதனால் மக்களுக்கு கணிப்பொறிகள் மிகவும் மலிவாகக் கிடைக்கத் தொடங்கின.
சிற்சில நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசாப்ட் விண்டோஸ் விநியோகம் தொடங்கியது. தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தங்களுக்குப் பின்னர் கணினி ஜனநாயகப்படுத்தப்படும் வகையில் 90களில் உலகின் தொழில்நுட்ப டெஸ்க்டாப் வாசலை பில் கேட்ஸ் திறந்து வைத்தார்.
தனிப்பட்ட கணினி சந்தை வளர்ந்தவுடன், மைக்ரோசாப்ட் உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமாக மாறியது. கணினி நிறுவனத்தில் ஏகபோக நிறுவனமாக உயர்ந்ததால் பல்வேறு சோதனைக்கு நிறுவனம் ஆளானது.
ஒரு கட்டத்தில் சில கவனக்குறைவினால் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. எனினும் தவறுகளைச் சரிசெய்து மைக்ரோசாப்ட் நிறுவனம் உயர்ந்து நின்றது. அதன் பிறகு பல ஆண்டுகளாக அரசாங்க கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அனைத்துவிதமான சட்டரீதியான கணினித் தொழில்நுட்பப் பயணங்களுடன் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக பில் கேட்ஸ் பிரம்மாண்டமாக எழுந்து நின்றார்.