புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகியிருக்கிறது தெரியுமா? பேஸ்புக்கிற்கு போட்டியா? என்ன இருந்தாலும் பேஸ்புக்கை மிஞ்ச முடியுமா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னால் ஒரு விஷயம்; இந்தச் சமூக வலைத்தளம் உண்மையிலேயே புதுமையானது! எப்படி என்றால், பயனாளிகளுக்கு ‘டிஜிட்டல் சாகாவரம்’ அளிக்கும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் இறந்த பிறகும்கூட அவர்கள் சமூக வலைப்பக்கத்தை உயிருடன் வைத்திருக்கும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இணையப் பயனாளிகளின் டிஜிட்டல் இருப்பு அவரது மரணத்திற்குப் பிறகு என்ன ஆகும் எனும் கேள்விக்கு பதிலாகத்தான் எட்டர்9 (www.eter9.com) வலைப்பின்னல் சேவை உருவாகியிருக்கிறது. போர்ச்சுகல் நாட்டின் மென்பொருள் வல்லுநரான ஹென்ரிக் ஜோர்கே இந்தச் சேவையை உருவாக்கியுள்ளார்.
அடிப்படையில் பேஸ்புக் போன்றதுதான் என்றாலும் இரண்டு விதங்களில் இது மாறுபட்டது. இந்தச் சேவை செயற்கை அறிவு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் பயனாளிகளின் ஆளுமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆக, காலப்போக்கில் இந்தத் தளம் அதன் பயனாளிகளின் குணாதிசயத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் தன்மை கொண்டிருக்கிறது என்று ஹென்ரிக் சொல்கிறார். இதன் காரணமாகவே இந்தத் தளம் பயனாளிகள் இறந்த பிறகும் அவர்கள் சார்பில் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும். அவர்கள் உயிருடன் இருந்தபோது இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்தி வந்தனரோ அதே விதமாக மரணத்திற்குப் பின்னரும் தொடரச்செய்யும். இந்த வகையில் பயனாளிகளுக்கு டிஜிட்டல் சாகாவரத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
இந்தத் தளத்தை பயன்படுத்துவதும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை அதன் அறிமுகப் பகுதி உருவாக்குகிறது.
இதில் பயனாளிகளுக்கு இடையிலான தொடர்பு இணைப்பு இருக்கிறது. இணைப்புகள் அழைப்பு மூலம் உருவாக்கப்பட வேண்டும். அழைப்புகளை ஏற்கலாம், நிராகரிக்கலாம். அதன் பிறகு பயனாளிகள் பதிவுகளை வெளியிடலாம். மற்றவர்கள் பதிவுகளைப் பார்த்துக் கருத்து தெரிவிக்கலாம் அல்லது புன்னகைக்கலாம். பேஸ்புக் லைக்போல இதில் புன்னகை. பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிடச் சுவர் என்றால் இதில் அந்தப் பகுதி கார்டெக்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. (மூளையின் ஒரு பகுதி).
இந்த இரண்டையும் இணைக்கும் பாலமும் இருக்கிறது. அதாவது, பயனாளிகள் இந்தத் தளத்தில் தங்களுக்கான டிஜிட்டல் பிரதிநிதியை உருவாக்கி உலாவவிடலாம். ‘கவுண்டர்பார்ட்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் பிரதிநிதி பயனாளிகள் லாக் அவுட் செய்த பிறகும் அவர்கள் சார்பில் வலைப்பின்னலுக்குள் உறவாடிக்கொண்டிருக்கும். சும்மாயில்லை, பயனாளிகள் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் புன்னகைக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு அவர்களைப் பற்றிய புரிதலை உண்டாக்கிக்கொள்ளும். இந்த டிஜிட்டல் ஆளுமையே பயனாளிகள் உலகிலிருந்து விடைபெற்ற பிறகும் அவர்கள் சார்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.
இவை தவிர ‘நைனர்ஸ்’ எனும் டிஜிட்டல் ஜீவராசிகளும் இந்தத் தளத்தில் தோன்றுமாம். அவற்றைப் பயனாளிகள் தத்தெடுத்துக்கொண்டு வளர்க்கலாம். இவை எல்லாம் சேர்ந்துதான் இந்தத் தளத்தை செயற்கை அறிவின் மையமாக்குகிறது.
இணைய உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தச் சமூக வலைத்தளம் வேகமாகப் பயனாளிகளையும் ஈர்த்துவருவதாகச் சொல்கிறார் ஹென்ரிக் .
இணையதள முகவரி: >https://www.eter9.com/auth/login