சான் ஃப்ரான்சிஸ்கோ
ஃபேஸ்புக்கில் நமது பதிவு, போட்டோக்களுக்கு எத்தனை லைக்குள் கிடைத்துள்ளது என்பது குறித்த தகவலை மறைத்து வைக்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் இந்த வசதியைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
செயலிகள் நிபுணரான ஜானே மன்சூன் வாங் என்பவர், ஃபேஸ்புக்கில் ஒருவர் போடும் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகளை சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பார்க்கும் வகையில் மறைத்து வைக்கும் வகையிலான வசதியைக் கண்டறிந்துள்ளார்.
இத்தகவலை ஃபேஸ்புக் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அதன்படி, ''லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்; எனினும் இந்த சோதனை இன்னும் தொடங்கப்படவில்லை'' என்று ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்ஸ்டாகிராம் செயலியில், பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகளை அதன் உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் பார்க்கமுடியாத வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மே மாதம் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
என்ன காரணம்?
இந்த வசதியை அறிமுகம் செய்வதற்கான காரணத்தை விளக்கியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ''தங்களின் பதிவுகள் எத்தனை பேரைச் சென்று சேர்ந்துள்ளன, எவ்வளவு லைக்குகள் கிடைத்துள்ளன என்பது குறித்து ஃபேஸ்புக் பயனர்கள் பலர் கவலை கொள்கின்றனர். அவர்களின் அழுத்தத்தைப் போக்க முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரலில் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆதம் மொசேரி, ''இன்ஸ்டாகிராமில் எத்தனை லைக்குகள் கிடைத்திருக்கின்றன என்று மக்கள் கவலைப்படுவதைவிட, அவர்கள் விரும்பும் நபர்களோடு கூடுதல் நேரம் செலவழிப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.