இணையம் அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடிய இடம்தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் மனங்கொத்திப் பறவைகளாக மாறும் மனிதர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் இதயத்தை நொறுக்கிவிடக்கூடும். டிரால்கள் எனச் சொல்லப்படும் இந்த இணைய விஷமிகள் தனியே தாக்குதல் நடத்துவதுண்டு; குழுவாகச் சேர்ந்துகொண்டும் தாக்குதல் நடத்துவதுண்டு.
தாக்குதலுக்கு இலக்காகும் அப்பாவிகளுக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் பாதிப்புகளும் எல்லையில்லாதவை. இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்துள்ளனர். சிலர் இணையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இணையத்தின் இருண்ட பக்கத்துக்கான இந்தக் கசப்பான உதாரணங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.
லண்டனைச் சேர்ந்த இளம் பெண்ணான எம் ஃபோர்ட் அண்மையில் இந்த வகையான கசப்பான அனுபவத்துக்கு இலக்கானபோது இணைய விஷமிகளுக்குப் பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கிப் பதிவேற்றினார். சபாஷ் சரியான பதிலடி எனப் பாராட்டப்படும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி 60 லட்சம் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக அந்த வீடியோ இணைய தாக்குதலுக்கு இலக்காக கூடிய எவருக்கும் நம்பிக்கையையும் துணிச்சலையும் தரக்கூடியதாக இருக்கிறது.
எம் போர்ட் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பு. மாடலிங் துறையில் இருந்துள்ள அவர் 20 வயதிலேயே அதிலிருந்து ஓய்வு (!) பெற்று திரைப்பட உருவாக்கத்தின் பக்கம் வந்தவர். தன்னை இயல்பான கதை சொல்லி எனக் குறிப்பிடும் அவர் 2014 க்குப் பிறகு வீடியோ வலைப்பதிவாளராகி யூடியூப் நட்சத்திரமாகப் பிரபலமானார். மை பேல் ஸ்கின் எனும் அந்த வலைப்பதிவு மூலம் அவர் அழகுக் கலைக் குறிப்புகளைப் பகிர்ந்துவருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் போர்ட், மேக்கப் இல்லாத தோற்றத்தில் தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார். முகப்பருக்களுடன் தோன்றும் அந்தப் புகைப்படத்தில் இயல்பாகக் காட்சி தருவதற்காக அவர் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இணைய வெளியில் வறுத்தெடுக்கப்பட்டார். மேக்கப் இல்லாத கோலத்துக்காகவும், முகப்பரு தோற்றத்துக்காகவும் அவர் கடுமையாக வசைபாடப்பட்டார். இவரது முகத்தை நேராகப் பார்க்கவே முடியவில்லை, இவர் முகத்தைக் கழுவவே மாட்டாரா... என்பது போல மிக மோசமான வகையில் கருத்துகள் அமைந்திருந்தன. இது போல ஆயிரக் கணக்கில் கருத்துகள் குவிந்தன. இந்தக் கருத்துகளைப் படிக்க வேண்டாம், பார்த்தாலே மனம் வலிக்கும்.
இவற்றைத் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருந்த போர்ட் எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகியிருப்பார்? ஆனால் அவர் கண்ணீர் விட்டுக் கதறவில்லை; ஆவேசமாகப் பதில் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வேதனையை மற்றவர்களுக்கும் குறிப்பாக, வசைபாடியவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ படத்தை உருவாக்கினார். முகப்பரு கோலத்துடன் அவர் காட்சி அளிக்கும் அந்த வீடியோவில், அதைப் பார்த்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வரிசையாக வாசகங்களாக இடம்பெற்றன.
அந்தக் கருத்துகளால் ஏற்படக்கூடிய வலியை அவரது முகபாவனைகள் உணர்த்தின. அதன் பிறகு அவர் மேக்கப் சாதனங்கள் மூலம் அழகு செய்துகொண்டார். அப்போது அவரது அழகைப் பாராட்டும் வகையிலான கருத்துகள் திரையில் தோன்றின. ஆனால் அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேக்கப் தான் காரணம், அழகில்லாத தோற்றத்தை மறைக்கிறார் என்பது போல மோசமான கருத்துகள் தோன்றின. அப்போது அவரது முகத்தில் கண்ணீர் வழிகிறது. இதைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் நெஞ்சமும் உலுக்கப்படுகிறது.
இறுதிக் காட்சியில் அவர் கண்களைத் துடைத்துக்கொள்கிறார். அப்போது, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனும் வாசகம் திரையில் தோன்றுகிறது. உங்கள் அழகை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் எனும் ஊக்கமான வரிகளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
சமூக ஊடகங்களால் உண்டாகும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பின் பாதிப்பு பற்றி உணர்த்துவதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதாக போர்ட் கூறியிருக்கிறார்.
நீங்கள் அருவருப்பாக இருக்கிறீர்கள் (Youlookdisgusting) எனும் தலைப்பிலான வீடியோ மூலம் அவர் மற்றவர்கள் தோற்றத்தை விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் அழகாகப் பதிலடி கொடுத்திருப்பதாகப் பாராட்டப்படுகிறார்.
எம் போர்ட் உருவாக்கிய வீடியோ: >http://goo.gl/HBX2X1