ரத்த அழுத்தத்தைப் பற்றி மிக எளிதில் தெரிந்துகொள்ள வந்துவிட்டது ஒரு புதிய முறை. உங்கள் செல்பேசியில் இருக்கும் செல்ஃபி கேமரா மூலம் அதைத் துல்லியமாகக் கண்டறியும் வழியை கனடா மற்றும் சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டொராண்டோ பல்கலைக்கழக உளவியலாளர் காங் லீ என்பவறும் மற்றும் ஆராய்ச்சியாளர் பால் ஜெங் ஆகியோர் டிரான்ஸ்டெர்மல் ஆப்டிகல் இமேஜிங் (TOI - Transdermal Optical Imaging ) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
நமது முகத்தோலில் இருக்கும் ஒளி கசியும் தன்மையின் (translucent) மூலம் இது செயல்படுகின்றது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆப்டிகல் சென்சார்கள் நம் தோலின் கீழ் உள்ள ஹீமோகுளோபினிலிருந்து பிரதிபலிக்கும் சிவப்பு நிற ஒளியைப் படம்பிடிக்க முடியும். இது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்தி அளவிட்டு TOI - ஐ அனுமதிக்கின்றது. இந்தச் செயலியை சீனாவில் உள்ள நியூராலஜிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஐபோன் கேமராவின் மூலம் 1,328 நபர்களின் இரண்டு நிமிட செல்ஃபி வீடியோக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். மூன்று வகையான ரத்த அழுத்தத்தை சுமார் 95 சதவீத துல்லியத்துடன் அளவிட முடிந்தது. அதுமட்டும் இல்லாமல் முன்பே எடுக்கப்பட்ட வீடியோக்களையும் கூட இது துல்லியத்துடன் அளவிடும்.
இந்தச் செயலியின் மூலம் 30 விநாடி செல்ஃபி வீடியோவைப் பதிவு செய்யும் போது, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்த அளவீடுகளை வழங்குகிறது. மிக விரைவில் இந்தச் செயலியை சீனாவில் வெளியிட நியூராலஜிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் தவிர்த்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றையும் கண்டறிவதற்க்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மிகவும் டென்ஷனான சூழலில் பணியாற்றுபவர் ரத்த அழுத்தம் அதிகமானால் அதைப் பரிசோதிக்க மருத்துவமனையோ அல்லது மருந்தகத்திற்கோ செல்ல வேண்டாம். இருக்கும் இடத்தில் இருந்து செல்போனில் ரத்த அழுத்தத்தை செல்ஃபி கேமரா மூலம் தெரிந்துகொள்ளலாம்.