காதலுக்காகச் சிலர் எதைச் செய்யவும் தயராக இருக்கிறார்கள். அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலியைத் தேடுவதற்காகத் தனி இணையதளம் அமைத்திருக்கிறார்.
டேட்டிங் கலாச்சாரமும் , அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டில் ஒருவர் காதலியைத் தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது விசித்திரமாக இருக்கிறதா!
ஆனால், தனக்கு வேறு வழி இல்லை என்கிறார் ரென் யூ (Ren You). அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பிர்மிங்காமில் வசிக்கும் இவர்தான் காதல் வெப்ஸைட் அமைத்திருப்பவர்.
ரென் சாதாரணமானவரல்ல. ஹார்வர்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆனால் டேட்டிங் தான் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வேலைக்காக அலபாமா வந்த ஓராண்டில் எத்தனையோ டேட்டிங் முயற்சியில் ஈடுபட்டார், ஆனால் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. ஆகவே, காதலியைத் தேட புதிய வழியை கண்டுபிடித்ததாகச் சொல்கிறார் ரென்.
அந்த வழிதான், டேட்ரென் ( >http://dateren.com/) இணையதளம்.
காதலியைத் தேடிக்கொள்வதற்காக இந்தத் தளத்தை அமைத்துள்ளதுடன் அவர் நின்றுவிடவில்லை. தனக்குச் சரியான காதலியைப் பரிந்துரைக்கும் நபருக்கு 10,000 டாலர் பரிசு அளிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் ஒன்று, பரிந்துரைக்கப்படும் பெண்மணி தன்னுடன் குறைந்தது ஆறு மாதமாவது டேட்டிங் செய்தாக வேண்டும் என நிபந்தனை வித்திருக்கிறார். மேலும், பரிந்துரைப்பவருக்குத்தான் பரிசே தவிர காதலிக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
விநோதமாக இருக்கிறதா? அப்படி எல்லாம் இல்லை என்கிறார் ரென். தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் நிலை இருந்ததால் கைவசம் இருக்கும் 2-3 மணி நேரத்தில் டேட்டிங் முயற்சிக்காக பாரில் காத்திருப்பது சரியாகவா இருக்கும் என்று கேட்கும் ரென் அதைவிட இப்படி இணையதளம் மூலம் வலைவீசிப் பார்ப்பது பொருத்தமாக இருக்குமே என்கிறார்.
‘நான் தனியாக இருக்கிறேன் அதை மாற்ற வேண்டும் அதற்காகத் தான் இந்தத் தளம்’ என்றும் முகப்புப் பக்கத்திலேயே தெம்பாகக் குறிப்பிட்டுள்ளார் ரென். தனது முயற்சி பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டுத் தான் யார் என்பதையும் ஒளிப்படங்களுடன் தெரிவித்துள்ளார். அவரது பயோடேட்டாவும் அசத்தல்.
இது போன்ற இணையதளங்கள், விளம்பரம் தேடும் விளையாட்டு முயற்சியாக இருக்கலாம். ஆனால் வாலிபர் ரென்னின் முயற்சி உண்மையாகவே தெரிகிறது. அமெரிக்க நாளிதழ்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்து தனது முயற்சி பற்றி உற்சாகமாகப் பேசி வருகிறார்.
இந்த முயற்சிக்கு இதுவரை வரவேற்பும் நன்றாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். காதலி கிடைக்கிறாரோ இல்லையோ, கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
ரென் யூவின் காதல் இணையதளம்: >http://dateren.com/