பிரிட்டன் வாலிபர் பிரயன் வேக் (Bryon Wake ) உலகின் இளம் பயோ-ஹேக்கராகி இருக்கிறார். இதற்காக அவர் செய்திருக்கும் செயல் துணிச்சல் மிக்கது, நவீன தொழில்நுட்பத்தின் போக்கு பற்றிய பிரமிப்பையும் மிரட்சியையும் ஏற்படுத்தக்கூடியது.
15 வயது மாணவராக வேக் அப்படி என்ன செய்திருக்கிறார்? தனது கையில் அரிசி அளவுக்கு ஒரு சிப்பை நுழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த சிப் மூலம் அவரால் தனது ஸ்மார்ட் போனைக் கையசைவாலேயே இயக்க முடியும். போனில் பாட்டு கேட்பதற்குக் கையசைத்தாலே போதும். ப்ளூடூத் சாதனங்களை இயக்கலாம். கதவைத் திறக்கலாம். இன்னும் பல மாயங்களை இந்த சிப் மூலம் செய்ய முடியும்.
இப்படி உடம்புக்குள் சிப்பைப் பொருத்திக்கொள்வதை ஏற்கெனவே பலர் செய்துள்ளனர். இவர்கள் சைபோர்க் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பயோ-ஹேக்கர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரிட்டன் பேராசிரியர் கெவின் வார்விக் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே தனது உடம்புக்குள் சிப்பைச் சோதனை முறையில் பொருத்திக்கொண்டார் . அவர் தான் உலகின் முதல் சைபோர்க் எனக் குறிப்பிடப்படுகிறார்.
ஆனால் மாணவர் வேக்குக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதும், அவர் வேறு யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தானாகவே சிப்பைக் கைக்குள் பொருத்திக்கொண்டிருப்பதும் தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த வகை சிப்களை இணையம் மூலம் விற்பனை செய்துவருகிறது. அந்த நிறுவனத்தில்தான் வாலிபர் வேக், சிப்பை வாங்கி ஊசி மூலம் பொருத்திக்கொண்டிருக்கிறார். இந்த சிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நிறுவனம் தெரிவித்தாலும் டாக்டர் அல்லது செவிலியர் உதவி இல்லாமல் இதை உடம்புக்குள் செலுத்திக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடுகிறது. ஆனால் வேக் அந்த எச்சரிக்கை பற்றிக் கவலைப்படாமல் தானாகவே அதைப் பொருத்திக்கொண்டு சைபோர்க் மாணவராகிவிட்டார்.
உலகம் முழுவதும் 10,000 பேர் உடலுக்குள் சிப்பைப் பொருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கும் முதல் மாணவராக வேக் இருக்கிறார். இதைப் பெற்றோருக்குக்கூடத் தெரியாமல் அவர் செய்திருப்பதுதான் கொஞ்சம் திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.
பெற்றோர்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார், அவர்கள் அனுமதிக்கவில்லை, அதனால் அவர்களுக்குத் தெரியாமலே சிப்பைப் பொருத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கழித்துப் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். சில நாட்கள் கழித்து டாக்டர்களைப் பார்த்துத் தனது செயலால் மருத்துவச் சிக்கலும் இல்லை என்பதை அவர் உறுதி செய்துகொண்டிருக்கிறார்.
வேக்கின் சிப் முயற்சிக்கு உலகின் முதல் சைபோர்கான பேராசிரியர் வார்விக் பாராட்டு தெரிவித்திருக்கிறார். சர்ஜனாக இருக்கும் அவருடைய தாத்தாவும் பேரனுக்கு சபாஷ் போட்டிருக்கிறாராம்.