தொழில்நுட்பம்

வலியை உணர்த்தும் எழுத்துரு!

சைபர் சிம்மன்

பிரிட்டனைச் சேர்ந்த வரைகலை வடிவமைப்பாளர் டான் பிரிட்டனுக்கு சபாஷ் போட வேண்டும். ஏனெனில் அவர் எழுத்துருக்களுக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார். அதாவது வலியையும் வேதனையையும் எழுத்துரு மூலம் உணர்த்திப் புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறார்.

டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இந்தப் பாதிப்பின் தன்மையை மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் எழுத்துரு வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்.

டிஸ்லெக்சியா குறைபாடு பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் எத்தனை பேரால் அதன் பாதிப்பை உணர முடியும் என்று தெரியவில்லை. கற்றல் குறைபாடு எனும் விளக்கமோ அல்லது அதன் பின்னே உள்ள மருத்துவக் காரணங்களின் விவரிப்போ டிஸ்லெக்சியா பாதிப்பு கொண்டவர்கள் எதிர்கொள்ளும் தன்மையை முழுவதும் உணர்த்தக்கூடியதா என்ன?

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது டிஸ்லெக்சியா பாதிப்பை அறிந்துகொண்ட பிரிட்டன் அதை மற்றவர்களுக்கு உணர்த்தத் தீர்மானித்தார். தான் நன்கறிந்த வரைகலையைப் பயன்படுத்திப் பிரத்யேக எழுத்துருக்களை உருவாக்கினார்.

வழக்கமான எழுத்துரு போல இல்லாமல் உடைந்த எழுத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த எழுத்துரு கொண்டு படிப்பது எளிதல்ல. ஒவ்வொரு எழுத்தையும் தனியே கவனித்து அது என்ன எழுத்தாக இருக்கும் என ஊகித்து, வார்த்தைகளை வாசித்து வரிகளைப் படிக்க வேண்டும். இந்த அனுபவம் பொறுமையைச் சோதிக்கும்.

இதைத்தான் பிரிட்டனும் உணர்த்த விரும்புகிறார். உடைந்த எழுத்துருக்களைப் படிக்கும்போது எத்தகையை உணர்வு ஏற்படுகிறதோ , அதற்கு நிகரான உணர்வைக் கற்றல் குறைபாடு பாதிப்பு கொண்ட ஒவ்வொருவரும் தினசரி அனுபவிக்கிறார்கள் என்பதை இந்த எழுத்துரு மூலம் பிரிட்டன் புரியவைக்க முற்பட்டுள்ளார்.

முதல் முறையாக தனக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருந்ததைத் தெரிந்துகொண்டபோது பிரிட்டனுக்கு முதலில் நிம்மதியாக இருந்தது. காரணம், அதுவரை அவர் அனுபவித்து வந்த வேதனைக்கு இது விளக்கமாக அமைந்தது. அவரிடம் 10 வயதுச் சிறுவனுக்கான எழுத்தாற்றலும் 11 வயதுச் சிறுவனுக்கான வாசிப்புத்திறனும் இருப்பதைச் சோதனைகள் உணர்த்தின. இந்த நிலையில் அவரைச் சக மாணவர்களோடு ஒப்பிட்டு, வீட்டிலும் பள்ளியிலும் முட்டாள் என முத்திரை குத்தினால் என்னாகும்? டிஸ்லெக்சியா பாதிப்பு அவரது தடுமாற்றத்துக்கான காரணத்தை மற்றவர்களுக்கு விளக்கியது.

கற்றல் குறைபாடு பாதிப்பை மீறி இன்று வரைகலை வடிவமைப் பாளராக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் பிரிட்டனுக்குத் தன்னைப் போன்றவர்களின் நிலை மற்றவர்களுக்கு முழுவதும் புரிவதில்லை எனும் குறை இருக்கிறது. இந்தக் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு தகவல்களும்கூட இதைப் புரிய வைக்கக்கூடியதாக அமைந்திருக்கவில்லை என அவர் கருதினார்.

அதனால்தான் கற்றல் குறைபாடு பாதிப்பு கொண்டவர்களின் அக உலக வேதனைகளை, சாதாரணமாக வாசிக்கும் மற்றவர்களுக்குப் புரியவைக்க எழுத்துருவைப் பேச வைத்திருக்கிறார்.

குறைபாட்டுடன் மெதுவாக வாசிக்கும் சங்கடம், வேதனை மற்றும் வெறுப்பை இது உணர்த்தும் என்கிறார் பிரிட்டன்.

பிரிட்டன் உருவாக்கிய எழுத்துரு வடிவம்: >http://www.danielbritton.info/195836/2165784/design/dyslexia

SCROLL FOR NEXT