தொழில்நுட்பம்

வசீகரம் தரும் தொழில்நுட்பம்

யென்ஸி

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருடைய மொபைல் அலறியது. வெளியில் எடுத்து வெட்கத்துடன் பேசினார். அந்த மொபைல் அநேகமாக அந்த மாடலில் உருவாக்கப்பட்ட முதல் மொபைலாகவும் அந்த மாடலில் நீண்ட நாட்கள் உயிருடன் இருந்ததற்காகக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதாகவும் இருக்க வேண்டும். நண்பருக்கு வணிகம்தான் தொழில். வியாபாரத் தொடர்புக்காகத் தினம் நூற்றுக்கணக்கானோரைத் தொடர்புகொள்ளக் கூடியவர். பணப் புழக்கமோ சொல்லவே வேண்டாம். பிறகு ஏன் இவ்வளவு பழைய மாடலைப் பயன்படுத்துகிறார்? அவரைப் போன்றவர்களுக்கு மொபைல் என்பது பேசுவதற்கு உதவும் ஒரு கருவி. நாம் பேசுவது எதிர்த் தரப்பிற்கும் அவர் பேசுவது நமக்கும் கேட்டால் போதாதா என்னும் எண்ணம். இப்படியானோரை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிடும் அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு.

விதவிதமான மொபைல்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்துதான் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறது என்று சொல்கிறது அந்த ஆய்வு. லேட்டஸ்ட் கருவிகளைப் பயன்படுத்துவோரை அறிவாளிகள் எனப் பிறர் நினைக்கின்றனர் என்கிறது அது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாகப் பிரபலமான நடிகர்கள் சிலரைப் பேட்டி கண்டுள்ளார்கள். இந்தப் பேட்டியை இரு விதமாகப் படமாக்கியுள்ளார்கள். முதலில் நடிகர்கள் கையில் குறிப்பெடுக்கச் சாதாரண காலண்டரைப் பயன்படுத்தியுள்ளார்கள். அடுத்ததாகக் குறிப்பெடுக்க நவீன எலக்ட்ரானிக் காலண்டரைப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டு வீடியோகளையும் பார்வையாளர்களைப் பார்வையிடச் செய்துள்ளார்கள். நவீன எலக்ட்ரானிக் காலண்டரைப் பயன்படுத்திய வீடியோவையே பெருவாரியான பார்வையாளர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இதேபோல் சிலரது சுயவிவரக் குறிப்புகளை வைத்து ஒரு பரிசோதனை நடத்தியுள்ளனர். அதில் யாரெல்லாம் நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஏனைய விவரங்களில் எந்த மாறுதலும் இல்லை. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் மட்டுமே அவர்கள் முன்னணி பெற்றுள்ளனர் என்னும் உண்மை தெரியவந்துள்ளது.

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆண்களைவிட அதிக மதிப்பு கிடைக்கிறது என்பதையும் ஆய்வு வெளிக்கொண்டுவந்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் லேட்டஸ்ட் கருவிகளை வைத்திருப்பவருக்கு அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியுமா, இல்லையா என்பது பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் இருந்தாலே 90 சதவீதம் வேலை முடிந்தது. அதை நன்றாகப் பயன்படுத்தவும் தெரிந்திருந்தால் போதும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீங்கள்தான் தலைவர்.

வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. சாதாரணமாக சினிமாப் பாடல்களையே கிராமபோனில் எல்.பி. ரெக்கார்டில் கேட்கத் தொடங்கினோம். ஆனால் இன்று உலகில் எந்த மூலையில் உள்ள பாடல்களையும் அடுத்த நொடியில் இணையத்தில் பதிவிறக்கிக் கேட்டு மகிழ்கிறோம். தகவல்களைக் குறிப்புகளை டயரியில் குறித்துக்கொண்டிருந்தோம் இன்று உங்கள் கையில் உள்ள நவீன மொபைல்களில் எவ்வளவோ தகவல்களை உள்ளீடு செய்துகொள்ள முடியும். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களையும் நமது முன்னேற்றத்துக்கான கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் இப்போது பெருகியுள்ளன. தகவல் தொடர்புத் துறையில் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியைக் கற்பனைசெய்து பார்ப்பதே கடினம். அந்தத் தொழில்நுட்பங்களை நமது வளர்ச்சிக்குத் தக்க பயன்படுத்திக்கொள்வதில்தான் நமது திறமை பளிச்சிடுகிறது.

SCROLL FOR NEXT