தொழில்நுட்பம்

மேடை ஏறிய பிரணவ் மிஸ்ட்ரி... ட்விட்டரில் கொண்டாட்டம்

சைபர் சிம்மன்

எதிர்பார்த்தபடியே இந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட்போன் இன்று (திங்கள்கிழமை) அறிமுகமாகி இருக்கிறது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் இந்த அறிமுக நிகழ்ச்சிக்காக மேடையேறிய இந்திய இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளரான பிரணவ் மிஸ்ட்ரி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ட்விட்டரில் டிரெண்டிங்கும் ஆகியிருக்கிறார்.

சாம்சங் தனது முன்னணி தயாரிப்பான கேலக்ஸி வரிசையில் 'கேலக்ஸி எஸ் 6' மற்றும் 'கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்' ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் மொபைல் கண்காட்சியில் அறிமுகமான இந்தச் சாதனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நாள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சாம்சங் இந்திய சி.இ.ஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், அதன் ஆய்வு பிரிவுத் துணைத் தலைவர் மற்றும் திங் டாங் திட்ட தலைவரான பிரணவ் மிஸ்ட்ரியும் பங்கேற்றார்.

இந்தியாவின் குஜராத்தில் பிறந்து வளர்ந்த பிரணவ் மிஸ்ட்ரி இளம் கண்டுபிடிப்பாளராகவும், கம்ப்யூட்டர் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர்.

மிஸ்ட்ரி பெயரை குறிப்பிட்டதுமே, டிஜிட்டல் உலகுக்கும் ,நிஜ உலகுக்குமான தொடர்பை ஏற்படுத்தும் சிக்ஸ்த் சென்ஸ் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி ஆய்வு திட்டம்தான் நினைவுக்கு வரும். எந்த பரப்பையும் டிஜிட்டல் திரையாக்கி, அதை சைகை மூலம் இயக்கும் வசதி கொண்டதாக இந்தத் திட்டம் விளங்குகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பரப்புகள்தான் உலகில் இரண்டற கலந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக கருதப்படுகிறது.

ஆய்வுலகில் தனக்கென தனி இடம் பிடித்த மிஸ்ட்ரி 2012-ல் சாம்சங் நிறுவனத்தில் ஆய்வு பிரிவு இயக்குனராக சேர்ந்தார், சாம்சங்கின் ஸ்மார்ட்வாட்ச் திட்டத்தில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 2013-ல் சாம்சங் கேலக்ஸி கியர் வாட்சை அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார்.

நிறுவன ஆய்வு மற்றும் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இன்று கேலக்ஸி எஸ் 6 அறிமுக விழாவில் பங்கேற்ற மிஸ்ட்ரி, இதன் சிறப்புகள் மற்றும் இதன் பின்னே உள்ள வடிவமைப்பு கொள்கைகளை விளக்கிக் கூறினார்.

மிஸ்ட்ரி மேடையேறியதுமே ட்விட்டரில் அவரை வரவேற்கும் குறும்பதிவுகள் வெளியாகத் துவங்கின. சில மணி நேரங்களில் எல்லாம் நூற்றுக்கணககன குறும்பதிவுகளுடன் அவர் டிரெண்டிங் ஆனார். மிஸ்ட்ரி டிரெண்டிங் ஆனதையும் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

ஒவ்வொரு இந்திய தொழில்நுட்ப ஆர்வலருக்கும் மிஸ்ட்ரி முன்னுதாரணமானவர் என அவரை பாராட்டி குறும்பதிவுகள் வெளியாகின. ஒரு சிலர் கேலக்ஸ் எஸ் 6-ஐ விட மிஸ்ட்ரி கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மக்களை சென்றடைந்தால்தான் தொழில்நுட்பம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என மிஸ்ட்ரி கூறிய கருத்தையும் பலர் ரிடிவீட் செய்தனர்.

மிஸ்டிரி போன்ற இளம் சாதனையாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை ட்விட்டர் பயனாளிகள் உணர்த்தியுள்ளனர்.

ட்விட்டரில் மிஸ்ட்ரி தொடர்பான குறும்பதிவுகளைக் காண>#Pranav Mistry

மிஸ்ட்ரி பற்றி மேலும் அறிய:>http://www.pranavmistry.com/

*

சைபர்சிம்மனின் அதிகாரபூர்வ வலைதளம்>http://cybersimman.com/

SCROLL FOR NEXT