தொழில்நுட்பம்

கண்ணாடியில் திரைப்படம்

செய்திப்பிரிவு

கண்ணாடியில் திரைப்படம்

கூகுள் கண்ணாடி மூலம் உலகை கண்ணருகில் கொண்டுவந்துவிடலாம் என்பது ஒருபக்கம். இன்னொருபக்கம் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசையை ரசிப்பது மட்டுமல்ல, இனி படங்களையும் பார்த்துவிடலாம்.

கண்ணையும் மறைப்பதுபோல உள்ள இந்த ஹெட்செட்டில் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான திரை ஒன்று உள்ளது. கண்ணுக்கருகில் வைத்து பார்ப்பதால் ரெட்டினாவை பாதிக்காத வண்ணம் இந்த திரை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை நேரடியாக பார்ப்பதைவிட இணைப்பு கொடுத்து பார்க்கலாம். அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கண்டு ரசிக்க இந்த கருவி பயன்படும்.

கவிழ்ந்த கப்பல் - கவலையில் கார் நிறுவனங்கள்

தெற்கு இங்கிலாந்திலிருந்து விலையுயர்ந்த 1400 கார்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிங்கப்பூர் கப்பல் ஒன்று அதே கடற்கரை பகுதியிலேயே கவிழ்ந்து விட்டது. முழுவதுமாக கவிழ்ந்துவிடாமல் 50 டிகிரி கோணத்தில் தரை தட்டிய நிலையிலேயே அந்த கப்பல் கவிழ்ந்துள்ளது.

கப்பலில் ஜகுவார் லேண்ட் ரோவர், பிஎம்டபிள்யூ, ஹுப்பர் போன்ற விலை உயர்ந்த கார்களும் 80 ஜேசிபி வாகனமும் ஏற்றப்பட்டுள்ளன. கப்பல் முழுவதுமாக கவிழவில்லை என்பதால் கார்களை மீட்க முடியும் என்று நம்புகின்றன கார் நிறுவனங்கள். அந்த கப்பலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மைக்ரோசாஃப்ட்டின் ஃபிட்னஸ் பாண்ட்

பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது துறைசார்ந்து அடுத்தத் தலைமுறை கருவிகளை களமிறக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே உடற்பயிற்சியை அளவிடும் ஃபிட்னஸ் பாண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

நமது அன்றாட உடல்நிலையை கணக்கில் கொண்டு இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் என இந்த ரிஸ்ட் பாண்டில் உள்ள திரை காட்டும். மேலும் இந்த விவரங்கள் நமது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வரவேற்பை பொறுத்து இணையதளத்தை இணைக்கும் விதமாக அடுத்த கட்ட தயாரிப்பை கொண்டுவர உள்ளது.

தானியங்கி கார்கள்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. கூகுள் நிறுவனம் தனியாக செல்ப் டிரைவிங் கார்களுக்கான முயற்சியிலும் இறங்கியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்களோ டிரைவர் இல்லாமல் முழுக்க முழுக்க சென்சார்கள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய சாலைகளில் இந்த வகை கார்களை பரிசோதித்துள்ளது. அதிலிருந்து மேம்படுத்திய மாடலை 2016ல் சீன சாலைகளில் பரிசோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT