சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது, ஃபேஸ் புக்கை எதற்காக, எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துப்பார்த்தது உண்டா? இதுவரை இப்படி யோசித்ததில்லை எனில், உங்கள் ஃபேஸ்புக் பயன்பாடு குறித்து யோசியுங்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது உங்களுக்குப் பொருந்துகிறதா எனப் பார்க்க, ஃபேஸ்புக்கை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சுய ஆய்வுக்கு உள்ளாக்கிக்கொள்வது நல்லது.
ஃபேஸ்புக்கின் தாக்கமும் வீச்சும் அதன் பயனாளிகள் அறிந்ததுதான். சமீபத்திய புள்ளிவிவரப்படி ஃபேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 128 கோடி பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பயனாளி சராசரியாகத் தினமும் 35 நிமிடம் இந்தத் தளத்தில் செலவு செய்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்கை ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தலாம். நோக்கங்களும் மாறுபடலாம். ஆனால், இந்த இரண்டிலுமே பரவலான பொதுத்தன்மைகளைக் காணலாம்.
இந்தப் பொதுத்தன்மையைதான் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து அறிக்கையாகத் தந்துள்ளனர். பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்பு என்னவெனில், ஃபேஸ்புக்கைப் பயனாளிகள் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்பதுதான்.
உறவுகளை வலுப்படுத்துபவர்கள், தண்டோரா போடுபவர்கள், சுயபுராணம் பாடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் என இந்த நான்கு வகையான பயனாளிகள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையினருக்கான ஃபேஸ்புக் குணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதல் வகையான உறவுகளை மேம்படுத்துபவர்கள், ஃபேஸ்புக்கைத் தங்கள் நிஜ வாழ்க்கையின் நீட்டிப்பாக, குடும்பத்தினர், நண்பர்களுடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் நிலைத்தகவல்களை வெளியிடுவதற்கு பின்னே உறவுக்குக் கைகொடுப்போம் என்ற நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது ஃபேஸ்புக்குக்கு வெளியே உள்ள உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்காகத்தான் நிலைத்தகவல்களை வெளியிடுவதிலும், பதிவுகளுக்குப் பதில் சொல்வதிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது என்றாலும், குடும்பத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக் உதவுவதாக இந்தப் பிரிவினர் கூறியிருக்கின்றனர். இந்தப் பிரிவினர் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் அதிகம் பகிர்கின்றனர்.
இரண்டாவது பிரிவினர் தண்டோரா போடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குத் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதைவிட உலகில் என்ன நடக்கிறது என்பதையும், நாட்டு நடப்புகளைப் பதிவுசெய்வதிலும்தான் ஆர்வம் அதிகம். இவர்கள் பெரும்பாலும் செய்திகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் அறிமுகப் பக்கத்தை அப்டேட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கின்றனர்.
மூன்றாவது பிரிவினர் சுயநல செல்ஃபீக்கள். அதாவது தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், விளம்பரப்படுத்திக்கொள்ளவும் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள். முதல் பிரிவினரைப் போலவே இவர்களும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை அதிகம் பகிர்ந்தாலும் நோக்கம் எல்லாம், இவற்றுக்கு எத்தனை லைக்குகள் குவிகின்றன என்பதிலேயே இருக்கின்றன. எந்த அளவுக்கு லைக் தொடர்பான அறிவிப்புகள் வருகின்றனவோ அந்த அளவு சக மனிதர்களால் அங்கீகரிக்கப்படுவதாக இவர்கள் நினைக்கின்றனர்.
சரியோ, தவறோ தங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை ஃபேஸ்புக் மூலம் உருவாக்குவதுதான் செல்ஃபி பிரிவினரின் நோக்கம்.
நான்காவது பிரிவினர், கடை வீதியில் எதையும் வாங்காமல் உலா வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நிகரானவர்கள். இவர்கள் ஃபேஸ்புக்கிலும் இப்படித்தான் செய்துகொண்டிருக்கின்றனர். தங்களைப் பற்றி தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டாமல், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முற்படும் கில்லாடிகள். ஃபேஸ் புக்கில் யாரது பக்கத்தை வேண்டுமானாலும் எட்டிப் பார்த்து அவர்கள் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொள்வேன் என்று கூறுபவர்களாக இந்தப் பிரிவினர் உள்ளனர்.
இந்த நான்கு வகை ஃபேஸ்புக் பயனாளிகளில் தண்டோரா போடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் புதிதாக வெளிச்சத்துக்கு வந்து இருப்பவர்கள் என ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டாம் ராபின்சன் வியப்புடன் கூறியுள்ளார். ஏனெனில், இதற்கு முன்னரும் ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் ஃபேஸ்புக் பயனாளிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையினருடன் பொருத்திப் பார்க்கும்போது, உறவுகளை மேம்படுத்துபவர்களும், சுய புராணம் பாடுபவர்களும் எற்கெனவே அறியப்பட்டுள்ளனர். ஆனால், மற்ற இரு பிரிவினரும் புதிதாக உள்ளனர் என ராபின்சன் கூறுகிறார்.
ராபின்சனும் குழுவினரும் இந்த ஆய்வை மிக விரிவாகவே நடத்தியுள்ளனர். ஃபேஸ்புக்குடனான தொடர்பு குறித்து 48 விதமான வாசகங்களைக் கொடுத்து அதற்கான கருத்துகளைப் பயனாளிகளிடமிருந்து பெற்று அதன் பிறகு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு ஆய்வை நடத்தியுள்ளனர். மக்கள் ஏன் ஃபேஸ்புக்கில் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என்பதை ஆதாரக் கேள்வியாகக் கொண்டு ஆய்வு நடந்திருக்கிறது.
ஆய்வு முடிவுகள் சுவாரசியம் தருபவையாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன. எல்லாம் சரி, இந்த நான்கு ரகத்தில் நீங்கள் எந்த ரகம் என நினைக்கிறீர்கள்? அந்த ரகம், இந்த ரகம் எனத் தீர்மானிக்கும் முன் ஆய்வாளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். ஃபேஸ்புக் பயனாளிகளில் பலர், இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையினருடன் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகையினரின் குணத்தைப் பார்க்க முடிந்தாலும், குறிப்பிட்ட ஒரு வகையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வில் பங்கேற்றவர்களேகூட, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் எனப் பதில் கூறினாலும், பெரும்பாலும் பார்த்தால் இது தான் எனக் குறிப்பிட்ட ஒரு பிரிவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இனி, ஆய்வின்படி நீங்கள் எந்த வகை ஃபேஸ்புக் பயனாளி என சுய ஆய்வு செய்துகொள்ளுங்கள்!