சமூக நோக்கிலான செயலிகள் வரிசையில் அறிமுகம் ஆகியுள்ள டிராபிக்கேம் செயலி, இளம் பெண்களைத் தவறான முறையில் பயன்படுத்தும் இரக்கமில்லா ஆட்கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பயனாளிகளின் உதவியைக் கோருகிறது.
அப்பாவிப் பெண்களின் எதிர்காலத்தை நாசமாக்குபவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப் பயனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம், வெளியூர்களுக்குச் செல்லும்போது ஹோட்டலில் தங்க நேர்ந்தால் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அதில் உள்ள அறையை ஒளிப்படம் எடுத்து இந்தச் செயலியில் பதிவேற்றுவது மட்டும்தான். அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் இருப்பிடத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தத் தகவலை அளிப்பவர் பற்றி வேறு எந்தத் தகவலும் பதிவாகாது.
எதற்காக இந்த ஒளிப்படங்கள்? இளம் பெண்களைக் கடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் வைத்துப் படமெடுத்து இணையதளம் மூலம் விளம்பரம் செய்வதாகவும், இந்தப் படங்களை இந்தக் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரமாகவும் பயன்படுத்தலாம் எனவும் டிராபிக்கேம் இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால், அந்தப் படங்கள் எங்கு எடுக்கப்பட்டன என்பதை நிரூபிப்பதுதான்.
எனவே தான் இணையதள விளம்பரப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்க ஹோட்டல் அறைகளின் படங்களைச் சேகரிக்கத் தொடங்கின்றனர். ஹோட்டல் அறை ஒளிப் படங்களின் விரிவான பட்டியலை உருவாக்க இந்தச் செயலியை வடிவமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாகச் செயல்பட்டுவரும் டிராபிக் இனிஷியேட்டிவ் எனும் அமெரிக்க அமைப்பு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.
செயலிகள் வெறும் செய்தி அனுப்பவும், செல்பீ எடுக்கவும் அல்ல என்பதை உணர்த்தும் செயலியாக இது இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: >http://traffickcam.org/about