இணையவாசிகள் பலரும் இப்போது ஸ்மார்ட் போன் வழியேதான் இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்ப்பது முதல் ஒளிப்படங்களைப் பார்ப்பது, வீடியோக்களைக் கண்டு ரசிப்பது என எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட் போனை நாடுகின்றனர். ஸ்மார்ட் போன் உள்ளங்கையில் இணையத்தைக் கொண்டு வந்தாலும், அதில் சின்னச் சின்னச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. உதாரணத்துக்கு வீடியோக்களையே எடுத்துக்கொள்வோம். இணைய வீடியோக்கள் முழுவதும், அகல வடிவில் எடுக்கப்பட்டவை. இவற்றை ஸ்மார்ட்போன் திரையில் பார்க்கும்போது பொருத்தமில்லாமல் இருக்கும்.
ஸ்மார்ட் போன் திரையில் ஒளிப்படங்களோ, வீடியோக்களோ சதுர வடிவில் அல்லது, நீள வடிவில் இருந்தால் நல்லது. ஒளிப்படம் என்றால், ஸ்மார்ட் போன் திரைக்கு ஏற்ப திருத்திக்கொள்ளலாம். ஆனால் வீடியோக்களை என்ன செய்வது?
இந்தக் கேள்விக்குப் பதிலாக அமைகிறது ‘கிராப்.வீடியோ’ இணையதளம். அகல வடிவிலான வீடியோக்களை ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப இந்தத் தளம் திருத்தித் தருகிறது. அடிப்படைச் சேவை இலவசமானது. ஆனால், கூடுதல் வசதிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இணையதள முகவரி: >https://crop.video/