இந்திய மொழிகளில் இணைய தளத்தை உருவாக்கும் பணியில் கூகுள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய மொழிகளில் இணையதள ஒருங்கிணைப்பு (ஐஎல்ஐஏ) எனப்படும் இந்திய பிராந்திய மொழிகள் வளர்ச்சிக்கான குழுவுடன் கூகுள் நிறுவனம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
பிராந்திய மொழி பேசுவோரை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். முதல் முறையாக ஆன்லைனை உபயோகிப்போர் அதை முழுமையாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். குறிப்பாக ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மொபைல் சாதனங்கள் மூலம் ஆன்லைனை பயன்படுத்து வோருக்காக பிராந்திய மொழிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த முயற்சியால் 2017-ம் ஆண்டு இறுதியில் பிராந்திய மொழியை மட்டுமே அறிந்து இணைய தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் அதாவது 20 கோடி பேர்தான் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
சர்வதேச அளவில் அனை வருமே கூகுள் தளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தான் இலக்காகும். முதல் முறையாக கூகுள் தளத்தில் தகவல்களைத் தேடுவோரும் உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அமித் சிங்கால் தெரிவித்தார்.
இந்திய மொழிகளைப் பயன்படுத்துவோரின் வசதிக்காகவும், விளம்பரதாரர்கள் மேலும் பிரபலமடையவும் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன. இணையதளத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக ஆங்கிலம் பேசும் 19 கோடி பேர் ஏற்கெனவே ஆன்லைனில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சியோர் ஆன்லைனில் ஈடுபடா ததற்குக் காரணம் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததுதான்.
அத்தகைய 90 சதவீதம் பேரையும் அடைவதற்காகத்தான் பிராந்திய மொழிகளில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐஎல்ஐஏ அமைப்பில் ஏபிபி நியூஸ், அமர் உஜாலா பப்ளிகேஷன்ஸ், சி-டாக், பர்ஸ்டச், ஹிங்கோஜ், ஜாக்ரன், லிங்குயாநெக்ஸ்ட் டெக்னா லஜீஸ், என்டிடிவி, நெட்வொர்க் 18, ஒன்இந்தியா.காம், பத்ரிகா குழுமம், பிராசஸ் நைன் டெக்னாலஜீஸ் லிமிடெட், புரோஸ்ட் இன்னோவேஷன் லிமிடெட், ரெவரி லாங்குவேஜ் டெக்னாலஜீஸ், டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட், வெர் சே இன்னோவேஷன், நியூஸ் ஹன்ட், வெப்துனியா.காம், ஆகிய வற்றோடு கூகுளும் இணைந்துள்ளது.
இந்திய மொழிகளில் இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டால் இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 50 கோடி அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.