தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இருக்கும் திரவ இயக்க திட்ட மையம் (Liquid Propulsion Centre) தன்னாட்சி பெற்ற தனி மையமாக அங்கீகரிக்கப்பட உள்ளதால் தமிழக விண்வெளித் துறை விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி, கேரளாவின் வலியமலா மற்றும் பெங்களூரில் இஸ்ரோவின் திரவ இயக்க திட்ட மையங்கள் உள்ளன. 1981-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மகேந்திரகிரி விண்வெளி மையம் தொடங்கப்பட்டு, 1987-ல் திரவ திட்ட மையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திரா காந்தி வேண்டுகோளின்படி அப்போது அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய முன்னணி விஞ்ஞானி முனைவர் முத்துநாயகம் தலைமையில் பெங்களூர், வலியமலா, மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையங்கள் ஒருங்கிணைக்கபட்டன. தமிழ கத்தின் ஒரே மையமான மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம், கேரளாவின் வலியமலா மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இம்மையத்தை தன்னாட்சி பெற்ற தனி மையமாக அறிவிக்கக் கோரி மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மைய பணியாளர்கள் சங்கத்தினர், விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். கடந்த ஜனவரி 5-ம் தேதி இங்கு தயாரான க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து மகேந்திரகிரி மையத்தை தன்னாட்சி பெற்ற தனி மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி 4-ம் தேதி ‘தி இந்து’இதழில் கட்டுரை வெளியானது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இஸ்ரோ பெங்களூர் தலைமையகத்தில் இருந்து ஊழியர்களிடையே வீடியோ கான்பரன்ஸில் பேசிய அதன் தலைவர் ராதாகிருஷ்ணன், “இஸ்ரோவின் அடுத்தடுத்த சாதனைகளில் ஒன்றாக மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மையம், அதன் அடுத்த மேம்படுத்தப்பட்ட கட்டத்துக்கு செல்ல உள்ளது. அதன் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, வரும் 30-ம் தேதி மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மையத்துக்கு இத்துறைக்கான மத்திய அமைச்சர் நாராயணசாமி, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள். அன்றைய தினம் அம்மையத்தின் தன்னாட்சி மைய அங்கீகாரத்துக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.