ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய வரிசையிலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. சாம்சங் மொபைல் இணையதளம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. சாம்சங்கின் வழக்கப்படி இந்தப் புதிய வரிசை போன்களும் ஒற்றை எழுத்து பெயர் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே காலெக்ஸி எஸ்- 5 க்குத் தொடர்ச்சியாக பிராஜக்ட் ஜிரோ எனும் பெயரில் எஸ்-6க்கான தயாரிப்பு நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே கசிந்த தகவல்களை உறுதிசெய்வது போல சாம்சங் டைசன் இயங்கு தளத்திலான ஸ்மார்ட் போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குறைந்த விலையிலான இந்த போன்கள் இந்திய சந்தையில்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் தனது கியர் வாட்சில் டைசன் இயங்கு தளத்தைப் பயன்படுத்திவருகிறது.