அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரமே கடந்த 15-ம் தேதி கற்பனை நகராக மாறி, ஐந்து வயது சிறுவன் பேட்கிட்டாகி சாகசங்கள் நிகழ்த்துவதை கண்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தது.
சான்பிரான்சிஸ்கோவில் திரண்டிருந்தவர்கள் மட்டும் அல்ல், இணையத்திலும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாகசங்களை பின் தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்தச் சிறுவனின் சாகசத்தை பாராட்டி அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இவை எல்லாமே இணையத்தால் நிகழ்ந்த அற்புதம்.
அமெரிக்காவின் வடக்கு கலிப்போரினியாவை சேர்ந்த ஐந்து வயது சிறுவனான மைல்ஸ் ஸ்காட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருபவர். சிகிச்சையின் பலனாக தற்போது நோயின் தீவிரம் குறைந்திருக்கிறது. சிறுவன் மைல்சுக்கு பேட்கிட்டாக மாறவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது.
கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மேக் எ விஷ் அமைப்பு, மைல்ஸின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கோரிக்கை விடுத்தது.
பேட்மன் கதைகளில் வருவது போலவே சிறுவன் மைல்ஸ் பேட்கிட்டாக மாறி சாகசம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த சாகசத்தை நிஜமானதாக தோன்றச்செய்ய சிறுவனை கைக்தட்டி உற்சாகம் செய்ய பார்வையாளர்கள் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று 11,000 பேருக்கு மேல் ஆதரவு தெரிவித்து பங்கேற்கவும் முன் வந்தனர். பலர் இந்த முயற்சிக்கு ட்விட்டர் மூலமும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
திட்டமிட்டபடி 15-ம் தேதி பேட்கிட்டின் சாகசங்கள் அரங்கேறின. இதற்காக சான்பிரான்சிஸ்கோ நகரமே கோத்தம் நகரமாக (பேட்மேன் கதைகளில் வரும் கற்பனை நகரம்) மாறியிருந்தது. நகரின் மேயர், காவல்துறையினர் ஆகியோரும் இதில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருந்தனர்.
பேட்கிட் உடையணிந்து மைல்ஸ் தயாராக இருக்க, அவருக்கு துணையாக பேன்மேனும் இருந்தார். அப்போது நகரின் காவல்துறை தலைவர் கிரேக் சுர் (Chief Greg) நகரில் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக கூறி அவற்றை தடுக்க பேட்கிட்டின் உதவியை நாடுகிறார். உடனே பேட்கிட் குற்றவாளிகளை பிடிக்க புறப்படுகிறார். அவருக்காக பேட்மேன் வாகனமும் காத்திருக்கிறது. அதில் ஏறி பறக்கும் பேட்கிட் முதலாவதாக இளம்பெண் ஒருவரை காப்பற்றுகிறார். அடுத்ததாக வங்கி கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்துகிறார்.
பின்னர் பென்குவிகளிடம் இருந்து சான்பிரான்சிஸ்கோ ஜெயண்ட்ஸ் அணியின் அடையாள சின்னத்தை மீட்டுத்தருகிறார். பேட்கிட்டின் சாக்சங்களை வழியெங்கும் பொதுமக்கள் கைத்தட்டி பாராட்டி மகிழந்தனர். அவர்கள் பேட்கிட் எங்களை காப்பாற்று எனும் வாசகம் எழுதிய பேனர்களை கையில் வைத்டிருந்தனர். இறுதியில் கோத்தம் நகரை காப்பாற்றியதற்காக நகரின் மேயர் பேட்கிட்டை பாராட்டி நகரத்துக்கான சாவியை வழங்கி கவுரவித்தார்.
பொதுமக்கள் பேட்கிட்டை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். சான்பிரான்சிஸ்கோ கிரானிகள் இந்த சாக்சங்களுக்காகவே சிறப்பு பதிப்பை (கோத்தம் சிட்டி கிரானிகள்) வெளியிட்டது.
இதனிடையே ட்விட்டரில் பலர் இந்த சாகச காட்சிகளை பகிர்ந்து கொண்டனர். பலர் ட்விட்டர் மூலமே வாழ்த்து தெரிவித்தனர்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் அதிபர் ஒபாமாவும் ட்விட்டர் மூலம் வாழத்து தெரிவித்து 6 நொடி வீடியோ சேவையான வொயின் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார்.
பேட்கிட்டிற்காக ட்விட்டரில் உருவாக்கப்பட்டிருந்த #SFBatkid ஹாஷ்டேக் வாயிலாக 11-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். பேட்மேனாக திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் பென் ஆப்லாக்கும் ட்விட்டரில் வாழ்த்து கூறியிருந்தார்.
பேட்கிட்டாக வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறும் என்று சிறுவன் மைல்ஸ் நினைத்திருந்தானா என்று தெரியாது. ஆனால் இவ்விதமாக கோலகலாமாக நிறைவேறும் என நினைத்திருக்க வாய்ப்பில்லை. இணையம் மூலம் ஒன்று திறண்ட நல்லெண்ணம் கொண்டவர்களால் இந்த அற்புதம் சாத்தியமாகியிருக்கிறது.
இணையமும், சமூக ஊடகமும் சாத்தியமாக்க கூடிய விஷயங்களுக்கு இது நெகிழ்ச்சியான உதாரணம். பேட்கிட் சாகசம் பற்றி விரிவான தகவலுக்கு: >http://mashable.com/2013/11/15/batkid-beyond
தொடர்புடைய முந்தைய செய்தி:>சிறுவனுக்காக இணையத்தில் அணி திரளும் 7,000 பேர்!