அனுப்பும் ஒளிப்படங்கள் யாரிடமும் தங்காமல் தானாக மறைந்துவிட வேண்டுமா? யோவோ (Yovo) என்னும் புதிய அப்ளிகேஷன் இந்த வசதியுடன் அறிமுகமாகி இருக்கிறது.
ஏற்கனவே, ஸ்னேப்சேட், ஸ்லிங்ஷாட் செயலிகளும் இதைத் தானே செய்கின்றன என்று கேட்கலாம். யோவோ இவற்றைவிட ஒரு படி மேலே போய் அனுப்பும் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாதபடி பாதுகாப்பு அளிக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் முறையில் இந்தப் பாதுகாப்பு அமைந்துள்ளது. இதில் படம் எடுக்கும் போது அதன் மீது கலங்கலான தன்மை தோன்றும். வேகமாக வாகனத்தில் செல்லும்போது கம்பி வேலி தோன்றுவதுபோல இது இருக்கும். ஆனால் படத்தைப் பெறுபவர் அதைத் திறந்ததும் படம் தெளிவாகத் தெரியும்.
ஸ்கிரீன் ஷாட் எடுக்க முற்பட்டால் மறுபடியும் கலங்கலாகி விடுமாம். ஸ்னேப்சாட்டில் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான படங்கள் ஹேக்கர்கள் கையில் சிக்கியதாகச் செய்தி வெளியாகி உள்ள நிலையில், இத்தகைய செயலி தேவை என்று அந்தரங்கப் பாதுகாப்பை முக்கியமாகக் கருதுபவர்கள் நினைக்கலாம். இப்போது ஐபோனில் இது அறிமுகமாகி உள்ளது. ஆண்ட்ராய்டு வடிவம் வர உள்ளது.