அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்.
புளூ ஆர்ஜின் ராக்கெட்
அமேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆராய்ச்சிகளில் உள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ள ராக்கெட்டின் மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செயற்கை கோளை அனுப்பியவுடன், ராக்கெட்டின் அடிப்பாகம் தனியாக கழன்று பூமிக்கே திரும்பி விடும். இதன் மூலம் செயற்கைக் கோள் ஏவ ஒரு ராக்கெட்டையே பலமுறை பயன்படுத்தலாம்.
எண்ணெய் உறிஞ்சும் பஞ்சு
கடலில் எண்ணெய் கசிவை உறிஞ்சும் புதிய வகை பஞ்சை சிகாகோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியுள்ளனர். எண்ணெயை பிழிந்து எடுத்த பிறகு மீண்டும் பஞ்சை பயன்படுத்தலாம்.
எமோஜி ரோபோ
உணர்வுகளை எமோஜியாக வெளிப்படுத்தும் ரோபைவை உருவாக்கியுள்ளது மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம். உத்தரவுகளை நிறைவேற்றிய பிறகு அதற்கான எதிர்வினையை ஸ்கீரினில் எமோஜி (முகபாவம்) மூலம் வெளிப்படுத்துகிறது.
வைஃபை ஸ்விட்ச்
வைஃபை மூலம் இயங்கும் ஸ்விட்ச். கென்சி என்கிற இந்த ஸ்விட்சை வீட்டின் ஒவ்வொரு ஸ்விட்ச் போர்டிலும் பொருத்திக் கொண்டால் ஸ்மார்ட்போன் செயலியிலிருந்து ஆன் / ஆப் செய்யலாம்.