இணையத்தில் கோப்புப் பகிர்வுக்கு உதவும் தளங்கள் அதிகம் இருக்கின்றன. எனினும் இவற்றில் எளிதினும் எளிதான சேவையாக 'ஜஸ்ட்பீம்இட்' அமைகிறது.
இந்தத் தளம் வாயிலாகக் கோப்புகளை அனுப்புவது மிகவும் எளிதானது. பயனாளிகள் பகிர்ந்துகொள்ள விரும்பும் கோப்பை இதில் இடம்பெறச் செய்தால் போதுமானது. இதற்கும் அதிகம் மெனக்கெட வேண்டாம். டெஸ்க்டாப்பில் உள்ள கோப்பை அப்படியே இழுத்து வந்து இதில் உள்ள பாராசூட் ஐகானில் கொண்டுவந்து சேர்த்துவிடலாம் அல்லது, அந்த ஐகானில் கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் உள்ள கோப்பைப் பதிவேற்றலாம்.
இதன் பிறகு பிரத்யேகமான முகவரி ஒன்று உருவாக்கித் தரப்படும். கோப்பைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் நபரிடம் இந்த முகவரியை அனுப்பி வைக்க வேண்டும். இந்த முகவரியை டைப் செய்து அணுகுவதன் மூலம் அந்த முனையில் இருப்பவர் கோப்பைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.
ஆனால், மறுமுனையில் தரவிறக்கம் செய்யும் வரை, இந்த முனையில் இருப்பவர் தனது கம்ப்யூட்டரில் பிரவுசர் விண்டோவை திறந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பயனாளிகளுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம் இது செயல்படுகிறது. இப்படி நேரடித் தொடர்பு மூலம் கோப்பு பகிரப்படுவதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால், இடையே எந்த இடத்திலும் அல்லது சர்வரிலும் அந்தக் கோப்பு சேமிக்கப்படுவதில்லை. எனவே இது மிகவும் பாதுகாப்பானதாகக் கொள்ளப்படுகிறது. தரவிறக்கம் செய்த பிறகு இந்த இணைப்பு பயனில்லாமல் போய்விடும்.
இந்தச் சேவையில் உள்ள இன்னொரு சாதகமான விஷயம் இதைப் பயன்படுத்த எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவையும் இல்லை. பல கோப்புகளை ஒரே முறையில் அனுப்பும் வசதியும் இருக்கிறது. எனினும் கோப்பு பகிர்ந்துகொள்ளப்படும் வேகம் அவரவர் இணைய இணைப்பின் வேகம் சார்ந்தது.