ஆண்ட்ராய்டு போன்கள் தெரியும். கிராண்ட்ராய்டு போன் தெரியுமா? இதுவும் ஆண்ட்ராய்டு போன்தான். ஆனால், பெரியவர்களுக்கானது. பொதுவாக, இளைஞர்கள்தான் ஸ்மார்ட்போன்களுக்கு நெருக்கமாக இருக்கின்றனர். ஆனால், வயதானவர்கள் செல்போனைப் பார்த்து மிரண்டு விடுகின்றனர். அதிலும் கூடுதல் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் தாத்தா பாட்டிகளை மேலும் மிரட்சியில் ஆழ்த்துகின்றன.
அதனால்தான் பிரிட்டனில் வயதானவர்களுக்கு என்று பிரத்யேக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளனர். ஆம்ப்லிகாம்ஸ் பவர் டெல் நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த போனிற்கு கிராண்ட்ராய்டு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த போனில் வழக்கமான ஸ்மார்ட்போனைவிட ரிங்டோன் ஒலி அதிகமாகக் கேட்கும். மெனு வசதிகள் குழப்பம் இல்லாமல் எளிமையாக இருக்கும். எழுத்துருக்களின் அளவும் பெரிதாக இருக்கும். மேலும் பின் பக்கத்தில் அவசர காலத்தில் தொடர்புகொள்வதற்கான பிரத்யேக பட்டனும் இருக்கிறது. இதில் உள்ள காலர் ஐடி போன் எண்ணைப் படித்துக் காட்டும் வசதியையும் கொண்டுள்ளது. ப்ளுடூத் வசதியும் கொண்டிருக்கிறது.