இணையதளங்களின் இணைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் தேவையும் இணையவாசிகளில் பலருக்கு இருக்கலாம். இணையதள முகவரிகள் நீளமாக வால் போலத் தோன்றமால், கச்சிதமாக இருக்க வேண்டுமானால் அதற்காக முகவரிச் சுருக்கச் சேவைகள் இருக்கின்றன. அதே போல இணையதள முகவரிகளைக் கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்துகொள்ள விரும்பினால், 'லிங்க்மோஜி' இணையதளம் அதற்கு உதவுகிறது.
இந்த இணையதளம் இணைய முகவரிகளை எல்லோருக்கும் பிடித்தமான எமோஜிகள் வடிவில் பகிர்ந்துகொள்ள வைக்கிறது. இதற்கு, முதலில் பகிர விரும்பும் இணைய முகவரிகளை இந்தத் தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த இணைப்பை எமோஜி எழுத்துகள் கொண்டதாக மாற்றித்தருகிறது.
இந்த இணைப்பை ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பகிர்ந்துகொள்ளலாம். எமோஜி இணைப்பை கிளிக் செய்தால் அதன் பின்னே உள்ள இணையதளத்திற்குச் செல்லலாம்.
இந்தத் தளம் உருவாக்கித் தரும் எமோஜி இணைப்பு பிடிக்கவில்லை எனில், பயனாளிகள் தாங்கள் விரும்பிய எமோஜி உருவங்களைத் தேர்வு செய்து இணைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இணையப் பயன்பாட்டில் கொஞ்சம் சுவாரசியமும் தேவை என நினைப்பவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் எமோஜி இணைப்பை கிளிக் செய்ததும், இணையதளம் தோன்றும் வரை காத்திருக்க நேரலாம்.
இணைய முகவரி: >http://www.linkmoji.co/