இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும், ஃபேஸ்புக் புரொஃபைல் படங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சமூக வலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் ஆரத்தி சோமன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில்,
* நண்பர் அல்லாத மற்றவர்கள் நம்முடைய புரொஃபைல் படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதைப் பகிரவோ மற்றவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவோ முடியாது.
* ஃபேஸ்புக் நண்பர் அல்லாதவர்கள், உங்களின் புரொஃபைல் படங்களோடு தன்னையோ, மற்றவர்களையோ டேக் (tag) செய்யமுடியாது.
* சாத்தியப்படும் இடங்களில், ஃபேஸ்புக் புரொஃபைல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. (தற்போது ஆன்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் இந்த முறை இருக்கிறது)
* புரொஃபைல் படத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நீல பார்டர் மற்றும் கவசம் காட்சிப்படுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
எதனால் பெண்கள் புரொஃபைல் படங்களில் தங்கள் படத்தை வைப்பதில்லை?
இதுகுறித்து இந்தியாவில் ஆராய்ச்சி நடத்திய ஃபேஸ்புக், ''இந்தியாவில் இருக்கும் பல்வேறு பெண்கள் தங்களின் படங்களை மற்றவர்களுடன், பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. குறிப்பாகத் தங்களின் முகங்களை இணையத்தில் காட்ட அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு புரொஃபைல் படங்களை வைப்பதன் மூலம் புகைப்படங்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆரத்தி சோமன் மேலும் கூறும்போது, ''பாதுகாப்பு விஷயத்தில் இந்தியப் பெண்கள் கொண்டிருக்கும் அக்கறையைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக்கில் புதிய அம்சங்களைப் புகுத்தி இருக்கிறோம். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, மற்ற நாடுகளுக்கும் இம்முறை விரிவுபடுத்தப்படும். அத்துடன் புரொஃபைல் படங்களில் மேலும் பல வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். ஃபேஸ்புக் மேற்கொண்ட மற்றோர் ஆய்வின்படி, நம்முடைய புரொஃபைல் படங்களில் கூடுதலாக சில வடிவமைப்புகளை மேற்கொண்டு பதிவிட்டால், அப்படத்தை வேறு இடங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு 75% குறைவாக இருக்கிறது'' என்றார்.