தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டில் நோக்கியா ஹியர்

சைபர் சிம்மன்

நோக்கியாவின் செல்போன் பிரிவைக் கையகப்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா ஸ்மார்ட்போன்களை நோக்கியா பெயர் இல்லாமல் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது. நோக்கியா லூமியாவில் இருந்து மைக்ரோசாப்ட் லூமியாவுக்கான மாற்றம் தொடங்கியிருக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சாதாரண செல்போன்களில் நோக்கியா பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த உள்ளது.

சமீபத்தில் நோக்கியா 130 புதிய போன் அறிமுகமானது. இரட்டை சிம் கார்டு வசதி கொண்ட இந்த போனின் விலை, ரூ. 1,649. வண்ன டிஸ்பிளே கொண்ட இந்த போன், 32 ஜிபி மெமரி கார்டில் 6,000 பாடல்களைச் சேமித்து வைக்கும் வசதி கொண்டதாம். 13 மணிநேர டாக்டைம் அல்லது 46 மணிநேர பாடல் வசதி கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் போனை வாங்க விரும்புகிறவர்கள் அல்லது மாற்று போன் தேவை என நினைப்பவர்களை இலக்காக கொண்டுள்ளது.

இதனிடையே நோக்கியா அதன் வரைபட சேவை வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. நோக்கியா நிறுவனம் செல்போன் பிரிவில் இருந்து வெளியேறிவிட்டாலும் நோக்கியா ஹியர் எனும் வரைபட சேவையை உருவாக்கி இருக்கிறது. இந்த வரைபட வசதி சாம்சங்கின் கேலக்ஸி சாதனங்கள் மற்றும் சாம்சங் கியர் ஸ்மார்ட் வாட்சுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சாதனங்களிலும் (ஜெல்லிபீன் மற்றும் அதற்கும் மேலான வர்ஷன்கள்) இவற்றைப் பயன்படுத்தலாம் என நோக்கியா அறிவித்துள்ளது. ஆனால், கூகுள்பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய முடியாது. நோக்கியா இணையதளத்தில் இருந்து பெறலாம். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால் இன்னும் பீட்டா வடிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT