தொழில்நுட்பம்

மின்னஞ்சலுக்கு வயது 32

ரோஹின்

தகவல் தொடர்புத் துறையில் மின்னஞ்சல் என்பது குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது மிக அதிக அளவில் பரவலாகியுள்ள மின்னஞ்சல் பிறந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மின்னஞ்சலின் தந்தை

முதன்முதலில் மின்னஞ்சலை ஏற்படுத்தியவர் ஷிவா அப்பாத்துரை என்னும் தமிழர். அலுவலகத்திற்கு உள்ளேயே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக உபயோகத்தில் இருந்த மெயில் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இமெயிலை உருவாக்கினார். இந்த மின்னஞ்சல் திட்டத்திற்கு அமெரிக்க அரசு 1982 ஆகஸ்ட் 30 அன்றுதான் அங்கீகாரம் அளித்துள்ளது.

1963-ம் ஆண்டு டிசம்பர் 2 அன்று மும்பையில் பிறந்த அப்பாத்துரை இமெயிலைக் கண்டறிந்தபோது அவருடைய வயது வெறும் 14 மட்டுமே. ஏழு வயது வரை மும்பையில் பெற்றோருடன் வசித்துவந்த அவர் பின்னர் அமெரிக்காவுக்குச் செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியின் லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்துவந்த அப்பாத்துரை, அப்போது நியூஜெர்ஸியின் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்காக மின்னஞ்சலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அலுவலக மெயிலுக்கு மாற்று

நியுமேடிக் டியூப் சிஸ்டம் என்னும் தொழில்நுட்பம் அலுவலகத்திற்குள் மெயிலை அனுப்பிக்கொள்ள உதவி வந்தது. அலுவலகத்திற்குள்ளே டைப் செய்துகொண்ட கடிதங்களை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட குழாய்களைப் பயன்படுத்தி செயலர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு செயலருக்கும் இன்பாக்ஸ், டிராப்ட், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்கள், அட்ரஸ் புக், பேப்பர் க்ளிப் போன்றவை இருந்தன. இதை அடிப்படையாகக் கொண்டே ஆனால் அந்த அமைப்பை மேம்படுத்தி அவர் இமெயிலை வடிவமைத்துக் கொண்டார்.

அந்த அமைப்பில் இருந்த அடிப்படையான விஷயங்களை அப்படியே உள்வாங்கிக்கொண்டார். குழாய் மூலம் அனுப்பிய கடிதங்களை எலக்ட்ரானிக் மெயிலாக மாற்றி அதை அனுப்ப முயன்று அதில் வெற்றிபெற்றார். அவர் தனது மின்னஞ்சலுக்கான புரோகிராமை ஃபோர்ட்டான் மொழியில் எழுதினார்.

ஒரு தமிழ் மாணவர் உருவாக்கிய மெயில் சிஸ்டம் இன்று உலக அளவில் அனைவருக்கும் பயன்படுகிறது. ஆகவே தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ஷிவா அப்பாத்துரையின் பங்களிப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியது. இன்னமும் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

இமெயிலைக் கண்டுபிடித்ததாக வேறு சிலரும் உரிமை கொண்டாடினாலும் இன்று இமெயில் இருக்கிற அடிப்படை வடிவத்தைக் கண்டறிந்தவராகப் பலராலும் அப்பாத்துரைதான் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்.

SCROLL FOR NEXT