ஸ்மார்ட்போன் தாக்கம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கவலை தரும் தகவலை தெரிவிக்கிறது.
கல்லூரி மாணவ, மாணவிகளில் 75 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை அதிகமாக சார்ந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 5 பேரில் ஒருவர் "ஸ்மார்ட்போன் இல்லாமல் நான் இல்லை" என்று சொல்லும் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
86 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை இரவில் தூங்கும்போது கைக்கு அருகிலேயே வைத்திருப்பதாகவும், 81 சதவீதம் பேர் போனை இழந்தால் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மோசம் என்ன தெரியுமா, ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் போன் ஒலிக்காத நேரங்களில்கூட, அது ஒலிப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளதுதான்.
மேலும், 55 சதவீதம் பேர் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அல்லது மோசமான மனநிலையில் இருந்து விடுபட ஸ்மார்ட்போனில் தஞ்சம் அடைவதாக கூறியுள்ளனர்.
பெண்கள் கையில் போன் வைத்திருக்கும்போது பாதுகாப்புடன் உணர்வதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் தாக்கத்தால் எதுவுமே உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற உணர்வும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாணவர்கள் மத்தியில் அலபாமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு நம் நாட்டு மாணவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.