தொழில்நுட்பம்

இந்தியாவிலேயே சென்னையில்தான் பிராட்பேண்ட் வேகம் அதிகம்: ஊக்லா

செய்திப்பிரிவு

சர்வதேச பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தில் சென்னை நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இணையதள வேகம் குறித்து ஆய்வுசெய்யும் ஊக்லா நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ''உலகளவில் நொடிக்கு 20.72 மெகா பைட்ஸ் (எம்பிபிஎஸ்) எனும் சராசரி டவுன்லோடு வேகத்துடன் இந்தியா 67-வது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் உள்ள 20 நகரங்களில், பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தில் 32.67 எம்பிபிஎஸ் என்ற அடிப்படையில் சென்னை நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையின் டவுன்லோடு வேகமானது, மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில் 57.7% அதிகமாகும்.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் டவுன்லோடு வேகமானது இந்தியாவின் சராசரி வேகம் 20.72 எம்பிபிஎஸ்-ஐ விட அதிகமாகும். டெல்லி நகரம் 18.16 எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகத்துடன் 5-வது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களிலேயே 12.06 எம்பிபிஎஸ் வேகத்துடன் மும்பை நகரம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல், மற்ற நகரங்களில் பாட்னா 7.8 எம்பிபிஎஸ் வேகத்துடன் கடைசி இடத்தை வகிக்கிறது. இது இந்தியாவின் சராசரி டவுன்லோடு வேகத்தைவிட 62.4% குறைவாகும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிவேகமாக ஆந்திர மாநில மக்கள் 28.46 எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகத்தை அனுபவித்திருக்கின்றனர். இது இந்தியாவின் மற்ற பகுதிகளின் டவுன்லோடு வேகத்தைவிட 37.4% அதிகமாகும்.

அதற்கடுத்த இடத்தில், தமிழ்நாடு 27.94 எம்பிபிஎஸ் எனும் டவுன்லோடு வேகத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மிசோரம் 3.62 எம்பிபிஎஸ் வேகத்துடன் கடைசி இடத்தை வகிக்கிறது'' என ஊக்லா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SCROLL FOR NEXT