வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது சற்றுத் தயக்கமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. நேர்காணலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வழிகாட்டுகிறது ‘இண்டர்வியூபுட்டி’ என்ற (https://interviewbuddy.in/ ) இணையதளம்.
வேலைவாய்ப்பு தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள், ‘மாக் இண்டர்வியூ’ எனச் சொல்லப்படும் சோதனை நேர்காணலில் ஈடுபட்டு தங்களை தயார்படுத்திக் கொள்ள இத்தளம் உதவுகிறது. இந்தத் தளத்தில் பதிவு செய்துகொண்டால், துறை சார்ந்த வல்லுநர்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்கலாம். கேள்விகளுக்குப் பதில் அளித்து பயிற்சி பெறலாம். இணையம் மூலம் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் செயல்பாடு தொடர்பான மதிப்பெண்களையும் பெறலாம்.
நேர்காணலை மீண்டும் பார்த்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால், இதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குச் சலுகை உண்டு. ‘இண்டர்வியூபிட்’ (https://www.interviewbit.com/) என்ற இணையதளமும் இதேபோன்ற சேவையை அளிக்கிறது.