தொழில்நுட்பம்

நாளைய உலகம்: தவறில் இருந்து காப்பாற்றும் ஆப்

மணிகண்டன்

தவறில் இருந்து காப்பாற்றும் 'ஆப்'

செல்போன் பயன்படுத்தும்போது நாம் செய்கிற சின்ன சின்னத் தவறுகள் பெரிய சங்கடங்களில் கொண்டு போய்விட்டுவிடும். உதாரணத்துக்கு, 'ஹாய் மச்சி' என்று நண்பனுக்கு அனுப்பவேண்டிய எஸ்.எம்.எஸ் 'ஃபிங்கர்' தவறி, அலுவலக பாஸுக்கு போய்விட்டால் நிலைமை என்னவாகும்! இதுமாதிரியான சங்கடங்களை தவிர்க்க வைப்பர் (wiper) அப்ளிகேஷன் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் தவறாக அனுப்பப்படுகிற எஸ்.எம்.எஸ்-ஐ உடனே அழித்துவிட முடியும். இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்துக்கும் கிடைக்கிறது.

ஆளைச் சொல்லும் கண்ணாடி

உலகின் மிகக் கடினமான விஷயங்களில் ஒன்று மனிதர்களின் மனதைப் படிப்பது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இதை மட்டும் துல்லியமாக செய்யமுடியாது. இந்நிலையில் ஒரு மனிதரை பார்த்தமாத்திரத்திலேயே அவர் கோபமாக உள்ளாரா, சோகமாக உள்ளாரா என்பதை சொல்ல முடியும் என்கிறது கூகுள் நிறுவனம்.

ஆனால் அந்த மனிதரை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கூகுளின் தயாரிப்பான கூகிள் கிளாஸை அணிந்துகொண்டு பார்க்கவேண்டுமாம். அப்படி பார்த்தால் ஒரு மனிதரின் கோபம், துக்கம், சந்தோஷம் அனைத்துமே முகத்தில் தெரியுமாம். அது மட்டுமின்றி, அந்த நபரின் பாலினம், வயதையும்கூட கண்டுபிடிக்கலாம் என்கிறது கூகுள். நெசமாங்களா?

சர்க்கரை பேட்டரி

ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய பிரச்சினை, சீக்கிரம் சார்ஜ் தீர்ந்துவிடுவது. ஸ்மார்ட்போன் போன்ற பெரும்பாலான கையடக்க மின் சாதனங்களுக்கு லித்தியம் அயான் பேட்டரிதான் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் விரைவில் சர்க்கரை மூலம் இயங்கும் பேட்டரியை அறிமுகப்படுத்தவுள்ளனர். இது ஸ்மார்ட்போனின் சார்ஜை நீண்ட நேரம் நீட்டிக்கச் செய்யுமாம். சர்க்கரையில் உள்ள வேதி சக்தியை மின் சக்தியாக மாற்றினால் இந்த பயோ-பேட்டரி தயாராகிவிடும். தற்போதுள்ள லித்தியம் அயான் பேட்டரிகளைவிட இந்த பயோபேட்டரி 42 ஆம்பியர் மணிநேரம் அதிகம் செயல்படும்.

SCROLL FOR NEXT