உலக அளவில் முன்னணி வீடியோ இணையதளமான யூடியூப் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த வீடியோ, யூடியூப் வரலாற்றிலேயே அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோ என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் 'ரீவைண்ட்' என்ற பெயரில் அந்த ஆண்டின் நிகழ்வுகளை வீடியோவாக யூடியூப் வரிசைப்படுத்தி வருகிறது. சுவாரஸ்ய சம்பவங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் உள்ளிட்ட பலவற்றின் தொகுப்பாக அது இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் வெளியான 'ரீவைண்ட் 2018' என்ற வீடியோ மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
டிசம்பர் 6- தேதி வெளியான இந்த வீடியோவை 1.36 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். ஏராளமானோர், ''இதுபோன்ற மோசமான வீடியோவைப் பார்த்ததே இல்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு, கனடா பாடகர் ஜஸ்டின் பீபர் பாடிய பாப் பாடலான 'பேபி' வீடியோவே 1 கோடி பேருக்கும் மேலானாரால் டிஸ்லைக் செய்யப்பட்டு, 'அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோ' என்ற பெயரைப் பெற்றிருந்தது.
தற்போது யூடியூப் வெளியிட்ட வீடியோ வெளியான 12 நாட்களுக்குள் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. வீடியோவைப் பார்த்தவர்களில் 85.38% பேர் வீடியோ நன்றாக இல்லை என்று டிஸ்லைக் செய்துள்ளனர்.
எனினும் இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள யூடியூப், ''ரீவைண்ட் குழுவினருக்கும் விமர்சகர்களுக்கும் நன்றி. அடுத்த ஆண்டு சிறப்பாக செயல்படுவோம்'' என்று தெரிவித்துள்ளது.