பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ், ஆப்பிள் ஐபேட்டில் (iPad) பயன்படுத்துவதற்காக சமீபத்தில் வெளியிட்ட தட்டச்சு செயலி மிகுந்த வரவேற்பை பெற்று, ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் ஆப் ஸ்டோரில் முன்னிலை வகிக்கிறது.
‘ஹேங்ஸ் ரைட்டர்’ (Hanx Writer) என்று அழைக்கப்படும் இந்தச் செயலி, மொத்த பிரிவுகளிலும் முதல் இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஐபேட்டில், முன்னர் நாம் பயன்படுத்திய பழமையான தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்வதுபோன்ற அனுபவத்தை அளிக்கும்.
அந்தக் கால தட்டச்சு இயந்திரம் போலவே, ஒவ்வொரு எழுத்தை அழுத்தும்போதும் சத்தம், கடினமான விசைப்பலகை, அடுத்த வரியைத் துவங்கும்போது ஒலிக்கும் சத்தம் எனப் பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை இந்தச் செயலி அளிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இலவச செயலியை, ஐபேட்டின் ஆன்-ஸ்க்ரீனிலோ அல்லது ப்ளூடூத் உதவியுடன் விசைப்பலகையில் இணைத்தோ பயன்படுத்தலாம்.
இந்தச் செயலி குறித்துத் தனது ட்விட்டர் கணக்கில், நடிகர் டாம் ஹேங்ஸ் தெரிவித்ததாவது:
“எனக்குப் பழமையான தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்யும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும், அதில் ஒலிக்கும் ஒசைக்காகத் தட்டச்சில் டைப் செய்யவேண்டும் என்று விரும்பினேன்.
ஏனெனில், அது நமது கற்பனைத் திறனோடு இயைந்த ஒரு இசை என நினைக்கிறேன். பாங்..பாங்..க்லாக்..க்லாக்..க்லாக்..புக்காபுக்காபுக்காபுக்கா என்ற இசை.. எனக்கு ஒவ்வொரு எழுத்து, ஒவ்வொரு வாக்கியத்தின் ஒலியும் தேவைப்பட்டது”, என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.