குறும்பதிவுச் சேவையான ட்விட்டரில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்கள் யாரை எல்லாம் ஃபாலோ செய்கிறீர்கள் என்பதும். ட்விட்டர் செயல்பாடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனில் ஃபாலோயர்களைக் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆர்வமுள்ள, நீங்கள் அறிய விரும்பும் துறை சார்ந்த நபர்களைப் பின்தொடர்வது நலம்.
இது தொடர்பாக வழிகாட்டுதல் தேவையெனில், ‘ஃபாலோபிரைடே’ எனும் இணையதளம் பயன்படும். இந்தத் தளம் ட்விட்டரில் ஃபாலோ செய்வதற்கான நபர்களைப் பரிந்துரைக்கிறது. முதலீட்டாளர்கள், வடிவமைப்பு, எழுத்தாளர்கள், சி.இ.ஓ.க்கள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் யாரை எல்லாம் பின்தொடரலாம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
பரிந்துரைக்கப்படும் பெயர்கள் ஒளிப்படத்துடன் தோன்றுகின்றன. ஒளிப்படத்தில் ‘கிளிக்’ செய்தால் அந்த நபரின் ட்விட்டர் பக்கத்துக்குச் செல்லலாம். நீங்கள் விரும்பினால் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களின் ட்விட்டர் முகவரியைப் பரிந்துரைக்கலாம்.
இணையதள முகவரி: https://followfriday.io/