அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மனிதவளத் துறை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நிறுவனங்கள் சமூக வலைதளங்களை மார்கெட்டிங்குக்கு பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.தற்போது ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது.
மேலும் வாடிக்கையாளர்களும் இணையத்தை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பது, ஸ்மார்ட்போன் களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிப்பது போன்ற காரணங்களால் 2016ம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் வி சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் 25,000 நபர்கள் டிஜிட்டல் மார்க்கெடிங் துறையில் தேவைப்படுவார்கள் என்று அவர் கூறினார். ஆனாலும் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த துறையின் வல்லுநர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
டெக்னாலஜி வளர்ந்து வரும் காரணத்தால் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்து தகவல்களை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று ரான்ஸ்டட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மூர்த்தி உப்பலுரி தெரிவித்தார்.
இதில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இதுபோல மார்க்கெட்டிங் வல்லுநர்கள் உடனடியாக தேவைப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களை கையாளுவது, அனல்டிக்ஸ், விடியோக்கள் தயாரிப்பது, இமெயில் மூலம் மார்கெட்டிங் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
இதில் ரான்ஸ்டட் இந்தியா கணிப்புப்படி இவர்களுக்கான ஆரம்ப சம்பளம் 4.5 லட்சம் முதல் 5.5 லட்சம்வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.