இணையத்தில் உலவும்போது இடறிப் போய் சுவாரசியமான இணையதளங்களைக் கண்டறிந்த இனிமையான அனுபவம் உங்களுக்கு உண்டா? ஆம் எனில், ‘ஸ்டம்பிள் அப்பான்’ சேவையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த சேவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமும் அடைந்திருக்கலாம்.
கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ‘ஸ்டம்பிள் அப்பான்’ இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய கண்டறிதலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்தான். ‘ஸ்டம்பில் அப்பான்’ தளம் வழங்கிய சேவையிலிருந்து இணையம் வெகு தொலைவு முன்னேறி வந்துவிட்டாலும், அந்தத் தளம் மூடப்படும் செய்தி அருமையான சேவை ஒன்றின் இழப்பே.
ஃபேஸ்புக், ரெட்டிட், ட்விட்டர் பாணி தளங்களுக்கு பழகிய இன்றைய தலைமுறையினர்கூட இந்தத் தளத்தின் பெயரைக் கேள்விபட்டிருக்கலாம். சமூக வலைப்பின்னல் சேவைகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலத்தில் இணையத்தில் புதிய தகவல்களையும் சுவாரசியமான இணையதளங்களையும் கண்டறிவதற்கான இடமாக ‘ஸ்டம்பிள் அப்பான்’ விளங்கியது.
சமூக ஊடக தளங்களின் டைம்லைனிலேயே புதிய செய்திகளையும், தகவல்களையும் இன்று தெரிந்துகொள்ள முடிகிறது. இதில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால், சமூக ஊடகங்கள் அறிமுகமாவதற்கு முன் இருந்த நிலை வேறு. அப்போது இணையத்தில் பொழுதை கழிக்க வேண்டும் என்றாலும் சரி, பயனுள்ள புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் சரி, கூகுள் போன்ற தேடியந்திரங்களில் வலை வீச வேண்டும்.
2002-ல் அறிமுகமான ‘ஸ்டம்பிள் அப்பான்’ புதிய அனுபவத்தைத் தந்தது. அன்று சமூக புக்மார்க்கிங் சேவை தளங்களில் ஒன்றாக அறிமுகமான ‘ஸ்டம்பிள் அப்பான்’, ஆர்வமும் ஆச்சர்யமும் அளிக்கக்கூடிய புதிய இணையதளங்களை எளிதாகக் கண்டறிய வழி செய்தது. தளத்தில் உள்ள ‘ஸ்டம்பிள்’ எனும் பட்டனை ‘கிளிக்’ செய்தால் போதும், புதியதொரு இணையதளம் பரிந்துரைக்கப்படும். தொடர்ந்து ‘கிளிக்’ செய்தால், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தளத்தை அறியலாம். இதுவே இடறி விழுவது (ஸ்டம்பிள்) என சுவாரசியமாகக் குறிப்பிடப்பட்டது. இடறி விழும் ஒவ்வொரு முறையும் புதிய தளத்தைக் கண்டறியலாம்.
இவை எல்லாமே இந்தத் தளத்தின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு பகிரப்பட்ட இணையதளங்கள். எனவே விதவிதமான தளங்களை இந்த வழியில் அறிமுகமாயின. உறுப்பினராக சேரும்போது பயனாளிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ளவை எனக் குறிப்பிடும் துறைகளுக்கு ஏற்ப இந்தப் பரிந்துரைகள் அமைந்திருக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆமோதிக்கும் நிராகரிக்கும் வசதியும் உண்டு. இதன் அடிப்படையில் அடுத்த முறைக்கான பரிந்துரைகள் பொருத்தமாக மாற்றி அமைக்கப்படும்.
இணையதளங்கள் தவிர வீடியோக்கள், தகவல்கள், செய்திகள் ஆகியவற்றையும் இந்த முறையில் கண்டறியலாம். இணையத்தில் அலுப்பு ஏற்படும்போது, இந்தத் தளத்தில் எட்டிப்பார்த்தால் சுவாரசியமான புதிய தளங்களைக் கண்டறிந்து உற்சாகம் பெறலாம். இதனாலேயே இந்தத் தளம் பிரபலமாக இருந்தது. ஆனால், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் செல்வாக்கு இழந்து பின்னுக்குத்தள்ளப்பட்டது.
பெரும்பாலானோர் இந்தத் தளத்தையே மறந்துவிட்டனர். இந்நிலையில், இதன் நிறுவனர்களில் ஒருவரான கிரேட் கேம்ப், இந்த சேவை மூடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த 16 ஆண்டு காலத்தில் 4 கோடிப் பயனாளிகளுக்கு 60 ஆயிரம் கோடி கண்டறிதலை இந்த சேவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஸ்டம்பிள் அப்பான்’ சேவை விடை பெறுவது வருத்தமானதுதான் என்றாலும், இந்த சேவை வேறு பெயரில் மறு அவதாரம் எடுக்க இருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆம், ‘ஸ்டம்பிள் அப்பான்’ பயனாளிகள், மிக்ஸ் (https://mix.com/) எனும் புதிய சேவைக்கு மாறிக்கொள்ளலாம் என கேம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ‘ஸ்டம்பிள் அப்பான்’ போல வருமா எனும் எண்ணம் கொண்டவர்கள், இந்த மாற்று சேவைகளை முயன்று பார்க்கலாம்: டிஸ்கவர்.காம் (https://www.discuvver.com/)- ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய தளத்தை அடையாளம் காட்டும் தளம். இதே போன்ற இன்னொரு சேவை https://urlroulette.net/, ஸ்டம்பிள்.டிவி (http://stumbl.tv/) - ஒவ்வொரு ‘கிளிக்’கிலும் ஒரு வீடியோவைக் காட்டும்.